இதனால், இறைவன் பாச ஞானங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பது கூறப்பட்டது. 17 வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் உள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : வான் கெட்டு - ஆகாயம் ஒடுங்கி, மாருதம் மாய்ந்து - காற்று ஒடுங்கி, அழல் நீர் மண் கெடினும் - தீயும் நீரும் மண்ணும் ஒடுங்கினாலும், தான் கெட்டல் இன்றி - தான் ஒடுங்குதல் இல்லாமல், சலிப்பு அறியாத் தன்மையனுக்கு - தளர்வு அறியாது இருக்கும் பெருமான்பொருட்டு, ஊன் கெட்டு - உடம்பு அழிந்து, உயிர் கெட்டு - ஆவி அடங்கி, உணர்வு கெட்டு - அறிவு ஒடுங்கி, என் உள்ளமும் போய் - என் மனமும் அழிந்து, நான் கெட்ட ஆ பாடி - தற்போதம் இறந்த விதத்தைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : பருப்பொருள் நுண்பொருளில் ஒடுங்குவதையே கெடுதல் என்று இங்குக் கூறினார். இறைவனுக்கு ஒரு கால் தோற்றமும் ஒரு கால் மறைவும் இல்லை ஆதலின், ‘தான் கெட்டலின்றி’ என்றார். கெடல் என்பது கெட்டல் என விரித்தல் விகாரம் பெற்றது. இறைவனிடம் கருவி கரணங்கள் எல்லாம் சென்று அணுவாய்த் தேய்ந்து ஒன்றாதல் வேண்டும் என்பார், ‘ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்’ என்றார். நான் கெடலாவது, சீவ போதம் சிவபோதத்தில் அடங்குதல். இதனால், இறைவன் பசு ஞானத்தாலும் அறியப்படாதவன் என்பது கூறப்பட்டது. 18 விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடை வைப்படியோம் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென் னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : விண்ணோர் முழு முதல் - வானவரது முழு முதல் கடவுளும், பாதாளத்தார் வித்து - கீழுலகத்தாருக்கு விதையானவனும், மண்ணோர் மருந்து - மண்ணுலகத்தாருக்கு அமுதம் ஆனவனும், அயன் மால் உடைய வைப்பு - பிரமன் திருமாலினது வைப்பானவனுமாகிய இறைவன், அடியோம் கண் ஆர - அடியோங்களது கண் நிரம்ப, வந்து நின்றான் - தோன்றி நின்றான், கருணைக் கழல்பாடி - அவனது அருட்பாதங்களைப் பாடி, தென்னா தென்னா
|