என்று - தென்னா தென்னா என்று சொல்லி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : தேவர்கள், முதல்வர்கள்; அவர்களுக்கும் முதல்வன் ஆனமையால் இறைவனை, ‘விண்ணோர் முழு முதல்’ என்றார். பாதாளத்தார் நினைத்துக் கரையேறுவதற்கு ஒரு வழியாக இருத்தலின், ‘பாதாளத்தார் வித்து’ என்றார். மண்ணுலகத்தார்க்கு எல்லா நலங்களையும் தருதலின், ‘மண்ணோர் மருந்து’ என்றார். அயனுக்கும் மாலுக்கும் அதிகாரத்தைக் கொடுத்து இன்பந் தருதலின், ‘வைப்பு’ என்றார். இதனால், இறைவன் உலகைக் காக்கின்ற முறை கூறப்பட்டது. 19 குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும் அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : குலம் பாடி - இறைவனது மேன்மையைப் பாடி, கொக்கு இறகும் பாடி - அவன் தலையிலணிந்த கொக்கு மந்தாரைப் பூவைப் பாடி, கோல் வளையால் நலம் பாடி - உமாதேவியினது அழகைப் பாடி, நஞ்சு உண்ட ஆ பாடி - நஞ்சையுண்ட தன்மையைப் பாடி, நாள்தோறும் - தினந்தோறும், அலம்பு ஆர் - ஒலித்தலைப் பொருந்திய, புனல் - நீர் சூழ்ந்த, தில்லையம்பலத்தே ஆடுகின்ற - தில்லையம்பலத்தின்கண்ணே நடிக்கின்ற, சிலம்பு ஆடல் பாடி - இறைவனது திருவடிச் சிலம்பினது ஓசையைப் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : கொக்கிறகு - மந்தாரை, ஒரு வகை மரம். (கலைக் களஞ்சியம்); இங்கு மரத்திலுள்ள பூவுக்கு ஆயிற்று. கோல் வளையாள் நலம் பாடுதல், அவன் உயிர்களுக்கும் இன்பம் வழங்குதலைப் புகழ்தலாகவும், நஞ்சுண்டதைப் பாடுதல் அவனது கருணையைப் புகழ்தலாகவும், அம்பலத் தாடுதலைப் பாடுதல் அவனது ஐந்தொழிற்சிறப்பைப் புகழ்தலாகவும் அமைதலால், அவற்றையெல்லாம் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம் என்றார். இதனால், இறைவனது திருக்கூத்தைப் புகழ வேண்டும் என்பது கூறப்பட்டது. 20 திருச்சிற்றம்பலம்
|