பக்கம் எண் :

திருவாசகம்
346


அவனைப் போலப் பல அசுரர்கள் தோன்ற அவன் பெற்ற வரம் பற்றி என்க. இவற்றையெல்லாம் திருவாலங்காட்டுப் புராணத்தில் விரிவாக அறிக. காளியை அடக்கியதற்கு, ஆணவத்தை அடக்கியது என்ற தத்துவப் பொருளையும் காண்க.

இதனால், இறைவன் உலகத்தை அழியாது காக்கிறான் என்பது கூறப்பட்டது.

14

கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

பதப்பொருள் : ஏடீ - தோழியே, கடகரியும் - மதயானையும், பரிமாவும் - குதிரையையும், தேரும் - இரதத்தையும், உகந்து ஏறாது - விரும்பி ஏறாமல் இடபம் உகந்து - எருதை விரும்பி, ஏறிய ஆறு - ஏறிய விதத்தை, எனக்கு அறிய - எனக்கு விளங்கும்படி, இயம்பு - சொல்லுவாய்.

தடமதில்கள் - பெரிய மதில்களாகிய, அவை மூன்றும் - அக்கோட்டைகள் மூன்றனையும், தழல் எரித்த அந்நாளில் - நெருப்பினால் எரித்துச் சாம்பராக்கிய அக்காலத்தில், திருமால் - திருமாலானவன், இடபமதாய் - எருது உருக்கொண்டு, தாங்கினான் - இறைவனைச் சுமந்தான்.

விளக்கம் : திரிபுரமெரித்தற்பொருட்டு விண்ணவர் அமைத்த தேரின் அச்சு முரிந்தபோது திருமால் எருது வடிவாய்த் தாங்கினான் என்பது வரலாறு. கடகரியும் பரிமாவும் முதலியன இன்மையால் எருதினை ஊர்ந்திலன்; திருமாலினது விருப்பத்திற்கு இயைய ஏறினான் என்பதாம்.

இதனால், சிவபெருமானது இறைமைத் தன்மை கூறப்பட்டது.

15

நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.

பதப்பொருள் : ஏடீ - தோழியே, அன்று - அக்காலத்தில், ஆலின் கீழ் இருந்து - கல்லால மரத்தின்கீழிருந்து, நால்வர்க்கும் - சனகாதி நான்கு முனிவர்களுக்கும், நான்மறையின் உட்பொருளை - நான்கு வேதங்களுள் சொல்லப்பட்ட கருத்துகளையே, நன்றாக - விளக்கமாக, அறம் உரைத்தான் - அறமாக உபதேசம் செய்தான்.

அன்று ஆலின்கீழ் இருந்து - அக்காலத்தில் கல்லாலின் கீழேயிருந்து, அறம் உரைத்தான் ஆயிடினும் - நான்கு வேதங்களுள்