13. திருப்பூவல்லி (தில்லையில் அருளிச்செய்தது) 'வல்லி' என்பது கொடி என்று பொருள்படும். பெண்கள் பூக்களைக் கொடியினின்று கொய்யும் செயல் பூவல்லி எனப்பட்டது. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'பூவல்லி கொய்யாமோ' என அமையப் பாடுவார் என்பதும் அறிக. நால்வகைப் பூக்களில் பெரும்பான்மைபற்றிக் கொடிப்பூவே கூறப்படுகின்றது. மாயவிசயம் நீக்குதல். அஃதாவது, உலகத்தின் வெற்றியாகிய மயக்கத்தை நீக்குதல் என்பதாம். நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : அணை ஆர் புனல் - அணை பொருந்திய நீர் சூழ்ந்த, தில்லை - தில்லையிலுள்ள, அம்பலத்தே ஆடுகின்ற - சிற்றம்பலத்திலே நடம் புரிகின்ற, புணையாளன் - பிறவிக்கடலுக்குத் தெப்பமாய் உள்ளவன், இணை ஆர் திருவடி - இரண்டாகப் பொருந்திய திருவடியை, என் தலைமேல் வைத்தலும் - என் தலையின்மீது வைத்தவுடன், துணையான - அதற்கு முன் துணையாய் இருந்த, சுற்றங்கள் அத்தனையும் - உறவினர் அத்தனை பேரையும், துறந்து ஒழிந்தேன் - விட்டு நீங்கினேன்; ஆதலின், சீர் பாடி - அவனது புகழைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : ஞானம், கிரியை என்பனவே இறைவனது இரண்டு திருவடிகளாம். அவற்றை நம் தலைமேல் வைத்தவுடன் நமது ஞானக்கிரியைகள் இறைவன் வழியே செல்ல, சுற்றத் தொடர்புகள் நீங்குமாதலின், 'திருவடி என் தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்' என்றார். இதனால், இறைவனது திருவடி ஞானத்தால் உலகப்பற்று அறும் என்பது கூறப்பட்டது. 1
|