பக்கம் எண் :

திருவாசகம்
355


வைத்து, அணங்கொடு - தேவியோடு, அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற - அழகிய தில்லையம்பலத்தில் நடனஞ்செய்கின்ற, குணம் - அருட்குணத்தை, கூரப்பாடி - மிகவும் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ - நாம் பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : வாழ்த்துவதற்கு வாயும், வணங்குவதற்குத் தலையும் வைத்தமை கூறினமையால், நினைத்தற்கு மனம் வைத்தமையும் பெறப்பட்டது. முக்கரண வழிபாடும் கூறியபடியாம். இவ்வழிபாடுகள் எல்லாம் நிலைத்தற்குச் சீரடியார் கூட்டம் துணை செய்யும் என்க.

"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்"

என்ற திருநாவுக்கரசர் வாக்கை இங்கு நினைவுகூர்க.

இதனால், முக்கரண வழிபாடும் இன்றியமையாமை கூறப்பட்டது.

7

நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : நெறி செய்தருளி - எனக்கு நல்ல வழி காட்டி, தன் - தனது, சீர் அடியார் - சிறப்புப் பொருந்திய அடியார்களது, பொன்னடிக்கே - பொன் போலும் திருவடிக்கே, குறி செய்து கொண்டு - உரியவனாக்கிக்கொண்டு, என்னை ஆண்ட - என்னை ஆண்டருளின, பிரான் - பெருமானது, குணம் பரவி - அருட்குணத்தை வாழ்த்தி, முறிசெய்து - அடிமை ஓலை எழுதிக்கொண்டு, நம்மை முழுது உடற்றும் - நம்மை முற்றிலும் வருத்துகின்ற, பழவினையை - பழமையாகிய வினையை, கிறிசெய்த ஆ பாடி - பொய்யாக்கிய விதத்தைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : அடியார் திருவடித்தொண்டு கிடைத்தற்கு அரிய பெரும்பேறாதலின், அதனை அருளின இறைவன் என்பார், 'சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான்' என்றார். 'உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்' என வேண்டுகிறார் முன்னவரும்.

வினை, அடிமைப்படுத்தும்; துன்பத்தைச் செய்யும். ஆதலின், 'முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினை' என்றார். கிறிசெய்தல், இந்நிலையைப் பொய்யாக்குதல்; அஃதாவது, வினையை நீக்குதல்.