பக்கம் எண் :

திருவாசகம்
367


என்றும், வேள்வி - யாகம், கலங்கிற்று என்று - நிலைகுலைந்தது என்றும் சொல்லி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : கைகள் அவியை உண்ணத் திரட்டியதால், அவற்றை வெட்டித் தண்டனை கொடுத்தார் என்பார், 'விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தான்' என்றார். வேள்வியில் முக்கியத் தேவனாகிய அக்கினி பங்கப்பட, வேள்வியே பங்கப்பட்டது என்பார், 'கலங்கிற்று வேள்வி' என்றார்.

இதனால், இறைவன் தீமை செய்த உறுப்புகளுக்குத் தண்டனை அளிப்பான் என்பது கூறப்பட்டது.

7

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற.

பதப்பொருள் : ஏடி - தோழீ, பார்ப்பதியை - பார்வதி தேவியை, பகை சாற்றிய - பகைத்துப் பேசின, தக்கனை - தட்சனை, பார்ப்பது என் - பெருமையுடையவனாக நினைப்பது என் என்று, பணைமுலை பாகனுக்கு - பருத்த தனங்களையுடைய உமாதேவி பங்கனாகிய சிவபெருமான்பொருட்டு, உந்தீபற - உந்தி பறப்பாயாக.

விளக்கம் : 'பார்ப்பது என்' என்பது ஒரு பொருள் என்று எண்ணலாகாது என்னும் பொருளது. சகலலோக மாதாவாகிய தேவியை ஒரு கூற்றிலுடையவனையே பொருளாக எண்ண வேண்டும் என்பதாம். பார்ப்பதியைப் பகை சாற்றியதாவது, தக்கனது வேள்வியைக் காண வந்த போது தேவியைப் பலவாறாக ஏசினதாம்.

இதனால், இறைவனது அருட்டன்மையை உணர்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

8

புரந்தர னார்ஒரு பூங்குயி லாகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற வானவர் கோன்என்றே உந்தீபற.

பதப்பொருள் : வானவர் கோன் -தேவர்களுக்குத் தலைவன் என்று சொல்லப்படுகின்ற, புரந்தரனார் - தேவேந்திரனார், ஒரு பூங்குயில் ஆகி - ஒர் அழகிய குயில் வடிவு கொண்டு, மரந்தனில் ஏறினார் - மரத்தினில் ஏறி ஒளிந்துகொண்டார், என்று - என்று சொல்லி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : புரந்தரனார் பூங்குயிலானது : தேவேந்திரன் தக்கன் யாகத்துக்குச் சென்று சிவ அபராதம் செய்தமையால், வீரபத்திரர் வந்த பொழுது அவரால் தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சிக்குயில் உருவம் கொண்டு மரத்தில் ஏறி மறைந்துகொண்டான் என்பதாகும்.

இதனால் சிவாபராதம் செய்தவர் கீழ்நிலை அடைவர் என்பது கூறப்பட்டது.

9