பக்கம் எண் :

திருவாசகம்
370


பதப்பொருள் : சூரியனார் - சூரியனது, தொண்டை வாயினில் - கொவ்வைக்கனி போன்ற வாயினில் உள்ள, பற்களை வாரி நெரித்த ஆறு - பற்களை நெரித்தமையால், வேள்வி மயங்கிற்று என்று - யாகம் கலக்கமடைந்தது என்று சொல்லி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : தக்கன் வேள்வியில் வீரபத்திரர் சூரியன் தாடையில் அடிக்கவே அவன் பற்கள் உதிர்ந்தன. ஆதலின், 'வாயினிற் பற்களை வாரி நெரித்தவாறு' என்றார். மயக்கம் இல்லாத இறைவனின்றி யாகம் நடந்ததாதலின், 'வேள்வி மயங்கிற்று' என்றார்.

இதனால், இறைவனின்றிச் செய்யும் நல்ல காரியமும் தீமையாய் முடியும் என்பது கூறப்பட்டது.

15

தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

பதப்பொருள் : தக்கன் மக்களைச் சூழ நின்று - தக்கன் தன் மக்களை அடுத்து இருந்தும், தக்கனார் - தக்கனார், அன்றே - அப்பொழுதே, தலை இழந்தார் - தலையை இழந்துவிட்டார், வேள்வி மடிந்தது என்று - யாகம் அழிந்தது என்று சொல்லி, உந்தீ பிற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : தக்கன் சுற்றத்தாரோடு சூழ இருந்தும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்பார், 'தக்கன் மக்களைச் சூழ நின்று தலையிழந்தார்' என்றார். இதுகாறும் தக்கன் வேள்வியை அழித்தமை கூறப்பட்டது. தக்கன் சிவபெருமானை எதிர்த்துச் செய்த வேள்வி அழிக்கப்பட்டமையால், இதுவும் திருவருள் வெற்றியாயிற்று.

இதனால், இறைவன் துணையில்லாத பொழுது ஏனையோர் சுற்றமாக இருந்து காக்க வல்லவரல்லர் என்பது கூறப்பட்டது.

16

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்றன் தாதைக்கே உந்தீபற.

பதப்பொருள் : அன்று - அக்காலத்தில், பாலகனார்க்கு - உபமன்னியாராகிய குழந்தைக்கு, பாற்கடல் ஈந்திட்ட - திருப்பாற்கடலை வரவழைத்து உண்ணக் கொடுத்தருளின, கோலச்சடையற்கே - அழகிய சடையையுடையவனும், குமரன்தன் தாதைக்கே - முருகன் தந்தையுமாகிய இறைவன்பொருட்டே, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : பாலை வேண்டி அழுதது சிறு குழந்தை; ஆனால், பெரிய பாற்கடலையே அருந்துவதற்கு அளித்தான் இறைவன் என்பார், 'பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட' என்றார். இதைக்