களாகிய நரசிங்கமூர்த்தி, வாமன மூர்த்தி இவர்களது தோலை உரித்துப் போர்த்த போர்வையையுடையவர் என்றும் பொருள் கூறவர். உள்ளம் கவர்தலாவது, பக்குவான்மாக்களது சீவகரணங்களைக் கவர்ந்து சிவகரணமாகச் செய்தல். 'என் உள்ளங்கவர் கள்வன்' என்ற திருஞானசம்பந்தர் வாக்கையும் காண்க. இதனால், இறைவன் பக்கவான்மாக்களது உள்ளத்தைக் கவர்பவன் என்பது கூறப்பட்டது. 7 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும். பதப்பொருள் : அன்னே - தாயே, தாளி அறுகினர் - (என்னால் காணப்பட்டவர்) தாளி அறுகம்புல்லினால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவர், சந்தனச் சாந்தினர் - சந்தனக் கலவையைப் பூசியவர், ஆள் எம்மை ஆள்வர் - அடிமையாக எங்களை ஆண்டருளுவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, ஆள் எம்மை ஆளும் - அடிமையாக எங்களை ஆண்டருளுகின்ற, அடிகளார்தம் கையில் - தலைவர் கையில், தாளம் இருந்தவாறு - தாளம் இருந்த விதம் என்னே! என்னும் - என்று சொல்லுவாள். விளக்கம் : தாளி அறுகு - அறுகம்புல்லில் ஒரு வகை, கணுக்களில் கிளைப்பது. தில்லையில் நடராஜப்பெருமானுக்குச் சந்தன அபிடேகமானதும் அறுகு மாலை சார்த்துவதும் இன்றும் காணலாம்; அது மிகவும் கவர்ச்சியாய் இருக்குமாதலின், 'ஆள் எம்மை ஆள்வர்' என்றாள். இதனால் வீணையையுடைமை போல, தாளத்தையும் உடையன் என்பதை, 'தமிழின் நீர்மை பேசிக் தாளம் வீணை பண்ணி' என்ற ஞானசம்பந்தர் வாக்கினால் அறிக. இறைவன், இறைவன் அடியார்களை ஆளாகக் கொண்டு ஆள்வன் என்பது கூறப்பட்டது. 8 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே என்னும். பதப்பொருள் : அன்னே - தாயே, தையல் ஓர் பங்கினர் - (என்னால் காணப்பட்டவர்) பெண்ணை ஒரு பாகத்திலுடையவர், தாபத வேடத்தர் - தவவேடத்தையுடையவர், ஐயம் புகுவர் - பிச்சை
|