பதப்பொருள்: கிஞ்சுகவாய் - முருக்கம்பூப் போலச் சிவந்த வாயினையுடைய, அம்சுகமே - அழகிய கிளியே, கேடு இல் - அழிதல் இல்லாத, பெருந்துறைக்கோன் - திருப்பெருந்துறை மன்னனாகிய, மஞ்சன் - மேகம் போல்பவன், மருவும் மலை - தங்கியிருக்கின்ற மலை, நெஞ்சத்து இருள் அகல - மனத்திலேயுள்ள அறியாமையாகிய இருள் நீங்க, வாள்வீசி - ஞானமாகிய ஒளியை வீசி, இன்பு அமரும் - இன்பம் நிலைத்திருக்கும், முத்தி அருளும் மலை என்பது - வீடு பேற்றினை அளிக்கின்ற அருளாகிய மலை என்பதை, ஆய்ந்து பகராய் - ஆராய்ந்து சொல்வாயாக. விளக்கம்: இறைவன் தன் திருவருளை மேகம் போலப் பொழிபவனாதலின், 'மஞ்சன்' என்பதற்கு, மேகம் போன்றவன் என்று பொருள் கொள்ளப்பட்டது. 'அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க' என்ற திருவண்டப்பகுதியையும் காண்க. இறைவனுக்கு அருளே மலை என்பதை, 'அருளிய பெருமை அருள்மலை யாகவும்' என்று கீர்த்தித்திருவகவலில் குறித்திருத்தல் காண்க. இதனால், இறைவனது மலை கூறப்பட்டது. 5 இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து. பதப்பொருள்: என் கிளியே - எனது கிளியே, கூடு புகல் - கூட்டில் புகாதே, ஒப்பு ஆடா - உவமையில்லாத, சீர் உடையான் - சிறப்பையுடைய பெருமான், ஊர்வது என் ஊர்தியாகக் கொள்வது எது எனின், எப்போதும் - எக்காலத்தும், தெய்வப்பெண் - தெய்வப் பெண்கள், தேன் புரையும் சிந்தையராய் - தேன் போலும் இனிய சிந்தையுடையவராய், ஏத்து இசைப்ப - துதி பாட, மகிழ்ந்து - மகிழ்ச்சிகொண்டு, வான் புரவி ஊரும் - பெருமையுடைய வேதமாகிய குதிரையை ஏறி வருவான், இப்பாடே வந்து - இவ்விடத்திலே வந்து, இயம்பு - அதனைச் சொல்வாயாக. விளக்கம் : 'புகல்' என்பதிலுள்ள 'அல்' எதிர்மறைப்பொருளில் வந்தது. 'தேன் புரையும் சிந்தை' என்றது, அன்புள்ள மனம் என்றபடி. கீர்த்தித்திருவகவலில், 'அரியொடு பிரமற்கு அளவறியாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்' என்று தமக்கு அளித்த காட்சியையே குறித்திருத்தலாலும், அவ்வாறு குறிக்கப்பட்ட குதிரை வேதமேயாகையாலும், 'வான்புரவி' என்றதற்கு 'வேதமாகிய குதிரை' என்ற பொருள் உரைக்கப்பட்டது. இதனால். இறைவனது குதிரை கூறப்பட்டது. 6
|