20. திருப்பள்ளியெழுச்சி இது திருப்பெருந்துறையில் அருளிச்செய்தது. இறைவனைப் பள்ளியினின்றும் எழச்சொல்லிப் பாடுவது. திரோதான சுத்தி இறைவன் பள்ளி கொள்வதாவது, நம் உள்ளத்தில் தோன்றாது மறைந்திருத்தல். இந்நிலையே திரோதானம் என்று சொல்லப்படுவது. அவன் எழுதலாவது, அம்மறைவு நீங்கி வெளிப்பட்டுத் தோன்றுதல். அங்ஙனம் தோன்றுமாறு வேண்டிப் பாடிய பகுதியாதலின், திருப்பள்ளியெழுச்சி எனப்பட்டது. எனவே, இதற்குத் திரோதான சுத்தி என்பது தத்துவக் கருத்தாகக் குறிக்கப்பட்டுள்ள பொருத்தமும் விளங்குகிறது. எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் றிருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள்: என் வாழ்முதல் ஆகிய பொருளே - என் வாழ்வுக்குக் காரணமாகிய பொருளே, சேற்று - சேற்றினிடத்து, இதழ்க் கமலங்கள் மலரும் - இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற, தண் வயல் சூழ் - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, உயர் - உயர்ந்த, ஏற்றுக்கொடி உடையாய் - இடபக் கொடியுடையவனே, எனை உடையாய் - என்னை அடிமையாக உடையவனே, எம்பெருமான் - எம் தலைவனே, போற்றி - வணக்கம், புலர்ந்தது - பொழுது விடிந்தது, பூங்கழற்கு - தாமரை போலுந்திருவடிகளுக்கு, இணை - ஒப்பாக, துணைமலர் - இரண்டு மலர்களை, கொணடு ஏற்றி - கொண்டு சார்த்தி, அதன் பயனாக, நின் திருமுகத்து - உன்னுடைய திருமுகத்தில், எமக்கு அருள் மலரும் - எங்களுக்கு அருளோடு
|