பக்கம் எண் :

திருவாசகம்
43


பதப்பொருள் : தில்லை மூதூர் ஆடிய திருவடி - தில்லையாகிய பழைய நகரில் நிருத்தம் செய்தருளிய திருவடிகளால், பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி - பல உயிர்களில் எல்லாம் தங்கிப் பல அருட்செயல் களைச் செய்தவனாகி, எண்ணில் - அளவில்லாத, பல்குணம் - பல குணங்களோடு, எழில் பெற விளங்கி - அழகு பெற விளங்கி, மண்ணும் - மண்ணுலகிலும், விண்ணும் - விண்ணுலகிலும், வானோர் உலகும் - மற்றைய தேவருலகிலும், துன்னிய - பொருந்திய, கல்வி - கல்வியை, தோற்றியும் - தோற்றுவித்தும், அழித்தும் - நீக்கியும், என்னுடை இருளை - என்னுடைய அஞ்ஞான இருளை, ஏறத்துரந்தும் - முழுதும் ஒழித்தும், அடியார் உள்ளத்து - அடியாருடைய உள்ளத்தில், அன்பு - அன்பானது, மீதூர - பெருக, அதனை குடிஆக் கொண்ட - குடியிருப்பாகக்கொண்ட, கொள்கையும் - அருளும், சிறப்பும் - தலைமையும் உடையவனாய்.

விளக்கம் : இந்நிலவுலகுக்கு நடுவாய் அமைந்த இடம் தில்லை மாநகரம். அதே போன்று, இவ்வுடம்புக்கு நடுவாய் அமைந்த இடம் நெஞ்சத்தாமரை. இவ்விரண்டு இடங்களிலும் இறைவனது இயக்கம் விளங்கிக் காணப்படும் என்பார், "தில்லை மூதூராடிய திருவடி பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி" என்றும், அண்டமாகிய உலகிலும் பிண்டமாகிய உடம்பிலும் ஓயாது நடைபெறும் இவ்வியக்கம் கொண்டே இறைவனது குணம் வெளிப்படுமாதலால், "எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி" என்றும், இறைவன் அறிவித்தாலன்றி உயிர்கள் அறியமாட்டா வாகையால், "துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்" என்றும், தம்முடைய அறியாமையைப் போக்கி இறைவன் அருள் புரிந்தமையைக் கூறுவார், "என்னுடை யிருளை ஏறத் துரந்தும்" என்றும், இறைவன் எல்லாவுயிர்களிலும் கலந்திருந்த போதிலும் அவன் விரும்பித் தங்கியிருக்குமிடம் அடியார் உள்ளமாதலால், "அடியார் உள்ளத்து அன்புமீதூரக் குடியாகக்கொண்ட கொள்கையும் சிறப்பும்" என்றும் இறைவனது திருவருள் முறைமை கூறப்பட்டது.

மன்னும் மாமலை மகேந்திர மதனிற்

10. சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்

பதப்பொருள் : சொன்ன ஆகமம் - மேலுலகத்தில் தான் சொல்லிய ஆகமத்தை, மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் - நிலைபெற்ற பெரிய மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து, தோற்றுவித்தருளியும் - நிலவுலகத்திற்கு வெளிப்படுத்தியும்.

விளக்கம் : ஆகமம் தோற்றுவித்தது.

படைப்புக் காலத்தில் ஆகமத்தை இறைவன் தோற்றுவித்து, பிரணவர் முதலியோர்க்கும், அனந்ததேவர் முதலியோர்க்கும்