பக்கம் எண் :

திருவாசகம்
437


23. செத்திலாப்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

உடம்பு நீங்கப்பெறாமையால் உண்டாகிய வருத்தத்தைக் கூறிய பத்து, செத்திலாப் பத்தாம்.

சிவானந்தம் அளவறுக்கொணாமை,

சிவானந்தத்தின் பெருக்கம்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பதப்பொருள் : ஐயனே - தலைவனே, அரசே - மன்னனே, அருட்பெருங்கடலே - அருளையுடைய பெரிய கடலே, அத்தனே - தந்தையே, அயன் மாற்கு அறியொண்ணா - பிரமன் திருமால் இவர்கட்கு அறிய முடியாத, செய்ய மேனியனே - சிவந்த திருமேனியையுடையவனே, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே, பொய்யனேன் - பொய்யனாகிய என்னுடைய, அகம் நெக - உள்ளம் நெகிழும்படி, புகுந்து - அதன்கண் புகுந்து, அமுது ஊறும் - அமுதம் சுரக்கின்ற, புதுமலர் - அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற, கழல் - வீரக்கண்டையணிந்த, இணையடி பிரிந்தும் - இரண்டு திருவடிகளைப் பிரிந்தும், கையனேன் - சிறியேனாகிய யான், இன்னும் செத்திலேன் - இன்னும் சாகாமல் இருக்கின்றேன், அந்தோ - ஐயோ, விழித்திருந்து - கண் விழித்திருந்தும், உள்ளக் கருத்தினை இழந்தேன் - மனத்தில் உள்ள நினைவை இழந்து விட்டேன், செய்வகை அறியேன் - இனிச்செய்வது இன்னது என்று அறியேன்.

விளக்கம் : செத்திலேன் என்பது, உடம்பினில் வாழ விரும்பாமையைக் குறித்தது. இறைவனையடைய விரும்பியிருந்தும் அவன் மறைகின்ற காலத்தில் உடன் செல்லாமல் நின்றுவிட்டேன் என்பார்,