அஞ்செழுத்தும் - ஐந்தெழுத்தையும், எண்ணிலேன் - யான் கணிக்கவில்லை, கலைஞானிகள் தம்மொடும் - அருள் நூல் வல்ல ஞானியரோடும், நண்ணிலேன் - சேரவில்லை, நல்வினை நயவாதே - நற்செயலை விரும்பாமல், மண்ணிலே பிறந்து - இவ்வாறு மண்ணுலகத்தில் பிறந்தும், இறந்து மண் ஆவதற்கு - இறந்து மண்ணாய்ப் போவதற்கும், ஒருப்படுகின்றேனை - சம்மதிக்கின்ற என்னை, அண்ணல் - பெரியோனாகிய சிவபெருமான், ஆண்டு - ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன்னுடைய அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம். விளக்கம் : ஐந்தெழுத்து மந்திரமுத் அடியார் கூட்டமும் மீண்டும் மல வாதனை உண்டாகாதவாறு தடுக்கும் ஆதலின், ஐந்தெழுத்தை ஓதுதலும் அடியார் கூட்டத்தில் இருத்தலும் இறைவனை அணைந்தோர் தன்மையாம். இவற்றைச் செய்யவில்லை என்பார், ‘எண்ணிலேன் திரு நாம அஞ்செழுத்தும்’ என்றும், ‘நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடும்’ என்றும் கூறினார். மண்ணாய்ப் போவது என்பது, பயனின்றிக் கழிவது என்பதாம். இதனால், ஐந்தெழுத்து ஓதுதலும் ஞானியரோடு இணங்குதலும் அடியார்கட்கு இன்றியமையாதன என்பது கூறப்பட்டது. 6 பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. பதப்பொருள் : பொத்தை ஊன் சுவர் - துவாரங்களையுடைய மாமிசச் சுவரையும், புழுப்பொதிந்து - புழுக்கள் பொருந்தி, உளுத்து - சிதைந்து, அசும்பு ஒழுகிய - நிணநீர் கசிந்து ஒழுகுகின்ற, பொய்க் கூரை - நிலையில்லாத கூரையையுடைய வீடாகிய, இத்தை - இந்த உடம்பை, மெய்யெனக் கருதி நின்று - நிலையானதென்று எண்ணி நின்று, இடர்க்கடல் - துன்பக்கடலின், சுழித்தலைப்படுவேனை - சுழலில் கிடப்பவனாகிய என்னை, முத்து - முத்தும், மாமணி - கருமையாகிய மணியாகிய நீலமும், மாணிக்கம் - மாணிக்கமும், வயிரத்து - வயிரமும் என்ற இவற்றினுடையவும், பவளத்தின் - பவளத்துடையதும் ஆகிய, முழுச்சோதி - நிறைந்த ஒளிகளை யெல்லாம் உடைய, அத்தன் - எம் தந்தை, ஆண்டு - ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன்னுடைய அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம். விளக்கம் : முத்து வயிரம் என்பவனவற்றின் ஒளியைத் திரு வெண்ணீற்றின் ஒளிக்கும், மாணிக்கம் பவளம் என்பனவற்றின்
|