விளக்கம் : தேவர்களும் இறைவனது திருநாமங்களைப் பரவி ஏத்துவராதலின், ‘அயன் மால் முதலியவர்களும் சொல்லிப் பரவும் நாமத்தான்’ என்றார். ‘பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை’ என்றதும் காண்க. சொல்லும் பொருளும் மாயா காரியமாதலின், மாயைக்கு அப்பாற்பட்ட இறைவனைச் ‘சொல்லும் பொருளும் இறந்த சுடர்’ என்றார். நெல்லிக்கனி உண்டார்க்கு நீர் வேட்கையினைத் தணிப்பதுடன், நீரைப் பருகும் போது இனிய சுவையினையும் தரும் இயல்பினது. இச்சிறப்புப் பற்றியே இறைவனை நெல்லிக்கனி என்றார். இதனால், இறைவனது திருநாமங்களைப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது. 4 திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண் டாவா என்ற நீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே. பதப்பொருள் : திகழத் திகழும் - மிகவும் விளங்குகின்ற, அடியும் முடியும் - திருவடியையும் திருமுடியையும், காண்பான் - காணும்பொருட்டு, கீழ்மேல் - கீழும் மேலுமாக, மாலும் அயனும் - திருமாலும் பிரமனும், அகழப் பறந்தும் - மண் அகழ்ந்தும் விண் பறந்தும், காணமாட்டா - காண முடியாத, அம்மான் - அந்தப் பெரியோன், இம் மாநில முழுதும் - இந்தப் பெரிய உலக முழுவதும், நிகழ - விளங்க, என்னை ஆட்கொண்டு - என்னை ஆளாகக்கொண்டு, பணி கொண்டு - எனது தொண்டினை ஏற்று, ஆவா என்ற - அந்தோ என்று இரங்கின, நீர்மை எல்லாம் - குணங்களை யெல்லாம், என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தை, புணர்ந்து - சேர்ந்து, புகழப் பெறுவது - புகழ்ந்து பேசுவது, என்று சொல்லோ - எந்நாளோ? விளக்கம் : ‘மால் கீழே அகழ்ந்தும், அயன் மேலே பறந்தும்’ என எதிர் நிரல் நிறையாகக் கொள்க. அகழ்ந்தும் என்பது, ‘அகழ’ என வந்தது. நீர்மையாவது, உலகோர் அறியப் பணி கொண்ட பெருங் கருணைத்திறம். புகழ்தல், அன்பினாலாம். இதனால், இறைவன் செய்த திருவருளின் பெருமையை வியந்து பாராட்ட வேண்டும் என்பது கூறப்பட்டது. 5
|