பக்கம் எண் :

திருவாசகம்
473


போன்ற அப்பெருமானை, புணர்ந்து - சேர்ந்து, தழைத்து - உடல் பூரித்து, தழுத்த கண்டம் கனைய - தழுதழுத்த கண்டம் கனைக்க, கண்ணீர் அருவி பாய - கண்களினின்றும் நீர் அருவியாகப் பாய, கையும் கூப்பி - கரங்களையும் குவித்து, கடி மலரால் - மணமுள்ள மலர்களைக்கொண்டு, புனையப் பெறுவது - அணியப்பெறுவது, என்று கொல்லோ - எந்நாளோ!

விளக்கம் : ‘இறைவன் தன் அடியாரல்லாத பிறருக்கு நினைய அரிய நெருப்பாய் இருக்கின்றான்’ என்ற நயமுந்தோன்றக் கூறி இருத்தல் காண்க. தனக்குவமையில்லாதவனாதலின், இறைவனை, ‘தனியை’ என்றார். உடல் பூரித்தல் முதலியன அன்பினால் உண்டாகும் மெய்ப்பாடுகள்.

இதனால், இறைவனை ஒரு நெறிய மனத்தோடு வணங்கி அருச்சிக்க வேண்டும் என்பது கூறுப்பட்டது.

7

நெக்கு நெக்குள் ளுருகி உருகி
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி திகழ
நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே!

பதப்பொருள் : உள் நெக்கு நெக்கு - மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து, உருகி உருகி - இடைவிடாது உருகி, நின்றும் - நின்றும், இருந்தும் - அமர்ந்தும், கிடந்தும் - படுத்தும், எழுந்தும் - எழுந்தும், நக்கும் - சிரித்தும், அழுதும் - அழுதும், தொழுதும் - வணங்கியும், வாழ்த்தி - வாயாரத் துதித்து, நானா விதத்தால் - பல வகையாக, கூத்தும் நவிற்றி - கூத்துகளையும் இயற்றி, செக்கர் போலும் திருமேனி - செவ்வானம் போன்ற திருமேனியை, திகழ நோக்கி - விளங்கப் பார்த்து, சிலிர்சிலிர்த்து - மயிர் சிலிர்த்து, என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தை, புணர்ந்து - சேர்த்து, புக்கு நிற்பது - புகுந்து நிற்பது, என்று கொல்லோ - எந்நாளோ!

விளக்கம் : ‘நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி’ என்றது, இறைவனை எப்போதும் வாழ்த்த வேண்டும் என்பதற்காகப் பல வகையில் கூறியபடி, கூத்து உலகியலைக் கடந்த அன்பினால் நிகழுமாதலின், ‘கூத்தும் நவிற்றி’ என்றார். ‘தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி’ என்று திருநாவுக்கரசர் அருளினதும் காண்க. ‘நவிற்றி’ என்றது, இடையறாது செய்வதைக் குறித்தது. இறைவனது வியாபகத்தில் அடங்கி நிற்றலை, ‘புக்கு நிற்பதென்று கொல்லோ’ என்றார்.