பக்கம் எண் :

திருவாசகம்
478


வீற்றிருக்கும் சிவபெருமானே, மால் - திருமால், பாடி புகழும் - புகழ்ந்து பாடுகின்ற, பாதமே அல்லால் - உன்னுடைய திருவடியையன்றி, நான் மற்றுப் பற்று இலேன் - யான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன், தேடி நீ ஆண்டாய் - என்னைத் தேடிவந்து நீ ஆட்கொண்டருளினை, ஊடுவது உன்னோடு - பிணங்குவது உன்னோடு தான்; உவப்பதும் உன்னை - மகிழ்வதும் உன்னையே; உனக்க உணர்த்துவது - உன்னிடத்தில் நான் தெரிவித்துக்கொள்வது, எனக்கு உறுதி - என் உயிர்க்கு நன்மை யாவதையேயாம்; வாடினேன் - நான் துணை இன்மையால் வாடியிருக்கின்றேன்; இங்கு வாழ்கிலேன் - இவ்வுலகத்தில் வாழ ஒருப்படேன்; வருக என்று - வருவாய் என்று அழைத்து, அருள் புரிவாய் - அருள் செய்வாயாக!

விளக்கம் : உரிமை பூண்டவனிடந்தான் ஊட முடியும். ஏனெனில், ஊடலின் காரணங்களை அறிந்து போக்க வேண்டியவன் அவனேயாதலின், இதுபற்றி, ‘ஊடுவது உன்னோடு’ என்றார். அத்தகைய உரிமையாளனைக் கண்ட பொழுதுதான் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆகையால், ‘உவப்பதும் உன்னை’ என்றார். உடல் நலத்தையன்றி உயிர் நலத்தைக கருதி இறைவனை வேண்டுதலே சிறந்ததாதலின், அதனை ‘உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி’ என்பதனால் விளக்கினார். வாட்டந்தவிரப் பயிருக்கு நீர் ஊற்றி வளர்ப்பது போலத் தண்ணளி புரிய வேண்டும் என்று வேண்டுவார், ‘வாடினேன்; இங்கு வாழ்கிலேன், வருக என்றருள் புரியாய்’ என்றார்.

இதனால் நன்மையும் தீமையும் இறைவனையன்றி இல்லை என்பது கூறப்பட்டது.

3

வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதிஈ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பதப்பொருள் : வல்லை - விரைவிலே, வாள் அரக்கர் - வாளை யேந்திய அரக்கரது, புரம் எரித்தானே - முப்புரங்களையும் நீறாக்கியவனே, தில்லை வாழ் - தில்லையில் வீற்றிருக்கின்ற, கூத்தா - கூத்தப் பெருமானே, சிவபுரத்து அரசே - சிவலோக நாதனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, எல்லை மூவுலகும் உருவி - விண், நிலம், பாதலம் என்னும் எல்லைகளையுடைய மூன்று