பேதம் இல்லதொர் கற்ப ளித்தபெ ருந்து றைப்பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீஎனை ஏதி லார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்றத னிச்ச ரண்சர ணாமெனக் காத லால்உனை ஓத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. பதப்பொருள் : பேதம் இல்லது - வேற்றுமை இல்லாததாகிய, ஓர் கற்பு அளித்த - ஒப்பற்ற ஞானத்தைத் தந்த, பெருந்துறைப் பெருவெள்ளமே - திருப்பெருந்துறையிலுள்ள பெரிய கடல் போன்றவனே, ஏதமே பல பேச - பிறர் பழிப்புச் சொற்கள் பல கூற, ஏதிலார் முனம்- அயலார் முன்னிலையில், நீ எனை என் செய்தாய் - நீ என்னை என்ன காரியம் செய்தாய்? சாதல் சாதல் பொல்லாமை அற்ற - அழிதலாகிய தீமையில்லாத, தனிச்சரண் - ஒப்பற்ற உன் திருவடியே, சரண் ஆம் என - எனக்குப் புகலிடமாகும் என்று, காதலால் - அளவற்ற அன்பால், உனை ஓத - உன்னைப் புகழ்ந்து பாட, நீ கழுக்குன்றிலே வந்து - நீ திருக்கழுக்குன்றத்திலே வந்து, காட்டினாய் - உன் திருக்கோலத்தைக் காட்டியருளினாய். விளக்கம் : ‘பேதம் இல்லதொர் கற்பாவது’ நிலைத்த ஞானம். பெருந்துறையில் உடன் செல்லாது பின்தங்கியதைக் குறித்துப் பிறர் ஏசுகின்றனர் என்பார், ‘ஏதிலார் ஏதமே பலபேச’ என்றார். ‘அங்ஙனம் ஏசுகின்றவர் முன்னிலையில் என்னை நீ மேலும் இழிவுறச் செய்தனை’ என்பார், ‘எனை ஏதிலார் முனம் என் செய்தாய்’ என்றும், ‘அங்ஙனமாயினும் நீ என்னைக் கைவிடாது வந்து அருள் செய்தாய்’ என்பார், ‘காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய்’ என்றும் கூறினார். ‘சாதல் சாதல்’ என்றது, பலகால் பிறந்து இறத்தல் எனப் பொருள் தந்தது. இதனால், ‘இறைவன் திருவடியையே சரண் என்று அடைய வேண்டும்’ என்பது கூறப்பட்டது. 6 இயக்கி மார்அறு பத்து நால்வரை எண்கு ணஞ்செய்த ஈசனே மயக்க மாயதொர் மும்ம லப்பழ வல்வி னைக்குள் அழுந்தவும் துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டு நின்தூய் மலர்க்கழல் தந்தெனைக் கயக்க வைத்தடி யார்மு னேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே. பதப்பொருள் : இயக்கிமார் - இயக்கிமாராகிய, அறுபத்து நால்வரை - அறுபத்து நான்கு பேரை, என்குணம் செய்த ஈசனே - எண் குணங்கள் உள்ளவர்களாகச் செய்த ஈசனே, மயக்கம் ஆயது - அறியாமையால் உண்டாவதாகிய, ஓர் மும்மலம் - ஒப்பற்ற மும்மலத்தினைப்பற்றி வந்த, பழ வல்வினைக்குள் - பழமையாகிய வலிய வினைக்கடலுள், அழுந்தவும் - நான் அழுந்திக் கிடக்கவும், துயக்கு அறுத்து - தளர்வினைப் போக்கி, எனை ஆண்டுகொண்டு -
|