விளக்கம் : உடம்பு சுமையாதலின், 'ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன்' என்று வருந்துகிறார். உலகத்தார் போல இல்லாமல் உன்னிடத்தில் அன்புடையவன் போல இருத்தலால், உலகில் உள்ளவர்கள், ஓர் உன்மத்தன் வருகின்றான் என்று வெருள்கின்றார்கள்; அடியார்களைப் போல மெய்யன்பும் எனக்கு இல்லை. ஆகவே, இரண்டும் இல்லாத நிலையை நீக்கி மெய்யன்பைத் தர வேண்டும் என்பார், கண்டார் வெருளாவண்ணம் மெய்யம்பை நான் பெற வேண்டும்' என்றார். உடல் நீக்கம் பெற்று வீடுபேறடைதற்கு உண்மையான அன்பு வேண்டும் என்பதாம். இதனால், இறைவன் அமுதம் போன்றவன் என்பது கூறப்பட்டது. 3 வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனையருளால் ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய்த் தொண்ட னேற்கும் உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே. பதப்பொருள் : வேண்டும் - உன்னை வேண்டுகின்ற, மெய் அடியார் உள்ளே - மெய்யடியார்களிடையே, அருளால் எனை விரும்பி ஆண்டாய் - கருணையால் என்னை முன்னம் ஆட்கொண்டருளினை; அடியேன் இடர் களைந்த - அதனால் அடியேனது துன்பத்தையும் நீக்கின, அமுதே - அமுதமே, அருமாமணிமுத்தே - அருமையான பெரிய மணியாகிய முத்தே, தூண்டா விளக்கின் சுடர் அனையாய் - தூண்டாத விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே, வேண்டாத ஒன்றும் வேண்டாது - விரும்பத்தகாத ஒன்றையும் விரும்பாது, மிக்க அன்பே மேவுதல் - மிகுந்த அன்பினையே பொருந்துதல், தொண்டனேற்கும் - அடியேனுக்கும், உண்டாம் கொல் - உண்டாகுமோ? வேண்டும் - அதுவே எனக்கு வேண்டும். விளக்கம் : 'வேண்டும் அடியார்' என்றதனால், அடியார்கள் இறைவனை வேண்டி இருந்தனர் என்பதும், தாம் அவ்வாறு விரும்பாதிருந்த போதிலும் தம்மை இறைவன் ஆட்கொண்டான் என்பதும் விளங்கும். 'வேண்டாதது' என்றது, உலகப்பற்று. உலகப் பற்றினைத் துறந்து இறைவனது பற்றினைப் பொருந்துவதற்கு மிக்க அன்பு வேண்டும் என வேண்டுவார், 'மிக்க அன்பே மேவுதலே தொண்டனேற்கும் உண்டாங்கொல்? என்றார். அயரா அன்பே அரன் கழல் சேர்க்கும் என்க. 'வேண்டாத' என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. இதனால், இறைவன் இயல்பாகவே அறிவுடையவன் என்பது கூறப்பட்டது. 4
|