அழியக்கூடியது; ஆனால், இறைவனது இன்பம் இத்தன்மையான குற்றம் யாதும் இல்லாதது ஆதலின், அதனை 'பேராமை முதலியவற்றையுடைய இன்பமாகடல்' என்றார். பேரா முதலிய ஏழு அடைமொழிகளும் கடல் ஏழு என்னும் நயத்தைத் தரும். 'அன்பினாலேயே இன்பம் பெறுதல் கூடும்; அவ்வன்பினைத் தந்து அடியார் கூட்டத்துடன் சேரக்க வேண்டும்' என்பதாம். இதனால், இறைவன் இன்பத்தின் நிலை கூறப்பட்டது. 6 கடலே யானைய ஆனந்தம் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன் உடையாய் நீயே அருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரா ரருளா லிருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, சோதி - ஒளிப்பொருளானவனே, கடல் அனைய ஆனந்தம் - கடல் போன்ற அவ்வளவு பேரானந்தத்தை, கண்டார் எல்லாம் - உன்னைப் பார்த்த அடியார் எல்லோரும், கவர்ந்து உண்ண - அள்ளிப் பருக, அடி நாயேன் - அடிமையாகிய நாயேன், இடரே பெருக்கி - துன்பத்தையே அதிகரிக்கச் செய்து, ஏசற்று - வருந்தி, இங்கு - இவ்வுலகத்தில், இருத்தல் அழகோ - இருப்பது அழகாகுமோ? நீயே அருளுதி என்று - நீதான் எனக்கு அருள் செய்வாய் என்று அறிந்து, உணர்த்தாது ஒழிந்து - அதுபற்றி உன்னிடம் வேண்டிக்கொள்ளாது இருந்து, கழிந்து ஒழிந்தேன் - பிரிந்து கெட்டேன், சுடர் ஆர் அருளால் - கதிரவன் போன்ற திருவருளால், இருள் நீங்க - என் அறியாமையாகிய இருள் நீங்கும்படி, இனித்தான் துணியாய் - இனியாவது நீ திருவுளம் பற்றுவாயாக. விளக்கம் : 'கடல்' என்றது, பெருமை குறித்து நின்றது; பேரானந்தம் என்றபடி. 'வேண்டிவார் வேண்டுவதே ஈவான் இறைவனே என்று அறிந்து வேண்டக்கொள்ளாமற்போனேன்' என்பார், 'நீயே அருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந் தொழிந்தேன்' என்றார். இறைவன் திருவருள் ஞானமயமானது ஆதலின், 'சுடரார் அருள்' என்றார். சுடராகிய அருளை நல்கி, இருளாகிய அறியாமையைப் போக்குவாயாக என்று வேண்டியபடியாம். இதனால், அவன் சோாதிப்பிழம்பானவன் என்பது கூறப்பட்டது. 7 துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்ட ரிடைப்புகுந்து திணியார் மூங்கிற் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் அணியார் அடியார் உனக்குள்ள அன்புந் தாராய் அருள்அளியத் தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே.
|