கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணா திரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே. பதப்பொருள் : கண் ஆர் நுதலோய் - கண்ணமைந்த நெற்றியையுடையோனே, அண்ணா - தலைவனே, கண்கள் களிகூர - என் கண்கள் இன்பம் மிகும்படி, கழல் இணைகள் - உன் இரு திருவடிகளையும், கண்டேன் - தரிசித்தேன், எண்ணாது - வேறொன்றையும் எண்ணாமல், இரவும் பகலும் - இரவிலும் பகலிலும், நான் - யான், அவையே எண்ணும் அது அல்லால் - அந்தத் திருவடிகளையே நினைப்பதல்லாது, யாக்கை - உடம்பை, மண்மேல் - மண்ணின்மீது, விடும் ஆறும் - கழித்தொழிக்கும் விதத்தையும், வந்து - வந்து, உன் கழற்கே புகும் ஆறும் - உன்னுடைய திருவடியில் சேரும் விதத்தையும், எண்ணக் கடவேனோ - நினைக்க நான் உரிமையுடையேனோ? உடையேன் எனின், அடிமை சால அழகுடைத்து - எனது அடிமைத்தன்மை மிகவும் அழகுடையது! விளக்கம் : உடம்பை விட்டு உயிரைப் பிரித்தலும், உயிரைத் தன்னடியில் சேர்த்தலும் தலைவனது செயலாதலின், 'அதனைப் பற்றி நினைக்க அடிமைக்கு உரிமை இல்லை' என்பார், 'மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ' என்றார். ஆதலின், இறைவனது திருவடியை எண்ணியிருத்தலே உயிர்கட்குக் கடன் என்பதாம். இதனால், உயிர்களது சுதந்தரமின்மை கூறப்பட்டது. 9 அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. பதப்பொருள் : புராண - பழமையானவனே, குழகா - அழகனே, கோல மறையோனே - அந்தணக் கோலம் உடையவனே, கோனே - இறைவனே, அழகே புரிந்திட்டு - உன்னுடைய அழகையே காண விரும்பி, அடி நாயேன் - உன் அடிமையாகிய நாய் போன்ற யான், அரற்றுகின்றேன் - அழுகின்றேன்; திகழா நின்ற திருமேனி காட்டி - விளங்குகின்ற உன்னுடைய திருமேனியைக் காட்டி, என்னைப் பணி கொண்டாய் - என்னையாளாகக் கொண்டாய்; புகழே பெரிய - புகழை மிக உடைய, பதம் - உன் திருவடிப் பேற்றினை, எனக்கு நீ தந்தருளாதே - எனக்கு நீ கொடுத்தருளாமல், என்னைக் குழைத்தாயே - என்னை வாடச் செய்தாயே! இது முறையோ!
|