பதப்பொருள் : கடலின் திரை போல் வரு - கடலின் அலைகள் போல ஓயாது வருகின்ற, கலக்கம் - கலக்கத்தைச் செய்யும், மலம் அறுத்து - பாசங்களைத் தொலைத்து, என் உடலும் - என் உடம்பிலும், எனது உயிரும் - என் உயிரிலும், புகுந்து - நுழைந்து, ஒழியா வண்ணம் - ஓர் இடமும் எஞ்சி நில்லாதபடி, நிறைந்தான் - நிறைந்தனன்; இதுவே, சுடரும் சுடர்மதி சூடிய - ஒளிப்பரப்பும் கதிர்களையுடைய பிறையை அணிந்த. திருப்பெருந்துறை உறையும் - திருப்பெருந்துறையில் வீற்றிருந்தருளும், படரும் சடை மகுடத்து - விரிந்த சடையாகிய முடியையுடைய, எங்கள் பரன் - எம் மேலோன், செய்த படிறு - செய்த கள்ளம். விளக்கம் : கடல் அலை போல ஓயாது துன்பத்தைச் செய்து கொண்டிருத்தலால், மலத்தை, 'திரை போல் வரும்' என்றார். மலத்தைக் களைந்து தூய்மை செய்து உடம்பிலும் உயிரிலும் இறைவன் கலந்தமையால் துன்பம் நீங்கிற்று என்க. ஆணவத்தோடு கலந்து இருந்தது போல இறைவனோடு கலந்திருக்க வேண்டும் என்பதாம். 'ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம் சாரும்நாள் எந்நாளோ' என்ற தாயுமானவர் வாக்கையும் காண்க. இறைவன் திருவடி ஞானம் பெற்ற பின்னர் அறியாமை நீங்கும் என்பதாம். இதனால், இறைவன் ஊனாய் உயிராய்க் கலந்திருக்கிறான் என்பது கூறப்பட்டது. 6 வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன்மண்ணும் விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே. பதப்பொருள் : பிறப்பு இறப்பு வேண்டேன் - நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்பவில்லை; ஆகையால், புகழ் வேண்டேன் - புகழை விரும்பேன்; செல்வம் வேண்டேன் - பொருளை விரும்பேன்; மண்ணும் விண்ணும் வேண்டேன் - மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன்; சிவம் வேண்டார்தமை - சிவத்தை விரும்பாத புறத்தாரை, நாளும் தீண்டேன் - ஒரு நாளும் தொடமாட்டேன்; மன்னு - நிலைபெற்ற, திருப்பெருந்துறை இறைதாள் - திருப்பெருந்துறை இறைவனது திருவடியை, சென்று சேர்ந்தேன் - சென்று அடைந்தேன்; பூண்டேன்
|