மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டா தஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. பதப்பொருள் : மஞ்சு உலாம் - மேகத்தில் உலாவுகின்ற, உருமும் அஞ்சேன் - இடிக்கும் அஞ்ச மாட்டேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன் - அரசரது நட்புக்கும் அஞ்ச மாட்டேன்; நஞ்சமே - விடத்தையே, அமுதம் ஆக்கும் - ஆமுதமாக ஏற்றுக்கொண்ட, நம்பிரான் - இறைவனானவன், எம்பிரான் ஆய் - எம் தலைவனாகி, செஞ்செவே ஆண்டுக்கொண்டான்; செம்மையாகவே எம்மை ஆட்கொண்டான்; அவனது, திரு - செல்வமாகிய திருவெண்ணீற்றை, முண்டம் தீட்டமாட்டாது - தமது நெற்றியில் பூச மாட்டாமல், அஞ்சுவார் அவரைக் கண்டால் - அஞ்சுவோராகிய அவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சம் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று. விளக்கம் : ஓசை ஒலியெல்லாம் ஆகிய இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியாரை இடியோசை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாதாதலின், 'மஞ்சுலாம் உருகும் அஞ்சேன்' என்றார். அவ்வடியார்களுக்கு மன்னனது தொடர்பினால் வரும் துன்பமும் ஒன்றும் இல்லையாதலின், 'மன்னரோடுறவும் அஞ்சேன்' என்றார். பல்லவ மன்னனோடு கொண்டிருந்த உறவை நீக்கிக்கொண்டபின், அவன் செய்த பல கொடுமைகளும் திருநாவுக்கரசரை ஒன்றும் செய்ய முடியாமை அறிக. ஆனால், இத்துணை உதவியும் பெற்று, அவனுக்குரிய திருநீற்றை அணியக் கூசுவாரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார். இவர்கள் செய்ந்நன்றி கொன்றோராதலின் என்க. இதனால், திருநீற்றை வெறுப்பவர்களுடன் இணங்கலாகாது என்பது கூறப்பட்டது. 9 கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. பதப்பொருள் : கோள் நிலா - கொலைத் தன்மை தங்கிய, வாளி அஞ்சேன் - அம்புக்கு அஞ்ச மாட்டேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் - இயமானது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்; நீள்நிலா - நீண்ட பிறையாகிய, அணியினானை - அணிகலத்தையுடைய சிவபெருமானை, நினைந்து - எண்ணி, நைந்து உருகி - கசிந்து உருகி, நெக்கு
|