பக்கம் எண் :

திருவாசகம்
542


திருமால் மண்ணுலகத்தை உண்டு படைப்புக் காலத்தில் மீளவும் உமிழ்கின்றார் ஆதலின், திருமாலை ஞாலமுண்டான் என்றார். தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகத்தாரும் பெற வேண்டும் என்று விரும்புவார், 'மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்றார் 'மூலக் கருவூலம் - திருவருள்; அதில் உள்ள நிதி, முத்தி இன்பம் என்பதாம்.

இதனால், இப்பிறப்பு உள்ள போதே முத்தி இன்பத்தைப் பெற வேண்டும் கூறப்பட்டது.

5

ஈண்டிய மாயா இருள்கெட
எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ
னுஞ்சொல்ல வல்லனல்லன்
வேண்டிய போதே விலக்கிலை
வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற
முத்திப் பரிசிதுவே.

பதப்பொருள் : ஈண்டிய - நெருங்கிய, மாயா இருள் கெட - கெடாத அறியாமையாகிய இருள் விலகவும், எப்பொருளும் விளங்க - எல்லாப் பொருள்களும் தெளிவாக விளங்கவும், தூண்டிய சோதியை - அருளிய சோதிப்பிழம்பினை, மீனவனும் - பாண்டிய மன்னனும், சொல்ல வல்லன் அல்லன் - சொல்லக்கூடிய திறமையுடையவன் அல்லன்; ஆயினும், வேண்டிய போது - விருப்பம் கொண்ட பொழுது, விலக்கு இலை - அவனை அடையத் தடை இல்லை; ஆகையால், தாள் வாய்தல் விரும்புமின் - அவன் திருவடியைப் பெறுதலை விரும்புங்கள்; பாண்டியனார் அருள் செய்கின்ற - சோமசுந்தரப் பாண்டியனாராகிய இறைவர் அருள் செய்கின்ற, முத்திப்பரிசு இதுவே - முத்தியின் தன்மை இதுவேயாகும்.

விளக்கம் : அறியாமையாகிய இருளில் மூழ்கிக் கிடந்தமையால் பரிமேலழகியராகவும், வந்தியாளாகவும் வந்த போது 'இவன் இறைவன்' என்று உணர முடியாமல் இருந்தான் பாண்டிய மன்னன் என்பார், 'மீனவனுஞ் சொல்ல வல்லனல்லன்' என்றார். 'இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுமாயின் அடையத் தடை இல்லை' என்பார், 'வேண்டிய போது விலக்கு இலை' என்றும், ஆகவே, வேறு பொருள்களை விரும்பாது, அவன் திருவடிகளையே விரும்ப வேண்டும் என்பார், 'தாள் வாய்தல் விரும்புமின்' என்றும், 'வேண்டுவார் வேண்டுவதே ஈபவன் இறைவன்' என்பார், 'பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திப் பரிசு இது' என்றும் கூறினார். 'அருள் செய்கின்ற முத்தி' என்பது, முத்தி அருள் செய்கின்ற பரிசு என்னும் கருத்துடையதாகும்.