அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. பதப்பொருள் : அழிவு இன்றி நின்றது - அழிவில்லாமல் நிலை பெற்றிருந்ததாகிய, ஓர் - ஒப்பற்ற, ஆனந்த வெள்ளத்திடை - பேரின்ப வெள்ளத்தில், அழுத்தி - திளைக்கச் செய்து, கழிவு இல் கருணையைக் காட்டி - நீங்காத அருளைப் புரிந்து, கடிய வினை அகற்றி - கொடுமையான இருவினைகளைப் போக்கி, பழமலம் பற்றறுத்து - பழமையாகிய ஆணவமலத்தை முழுதும் நீக்கி, ஆண்டவன் - ஆட்கொண்ட பாண்டி நாட்டுப் பெருமான், பாண்டிப் பெரும்பதமே - பாண்டிநாட்டு ஆட்சியாகிய பெரிய பதவியை மட்டுமோ, முழுது உலகும் தருவான் - உலகம் முழுமையும் தந்தருளுவான்; ஆதலின், கொடையே - அதனது பரிசிலைப் பெறுவதற்கே, சென்று முந்துமின் - சென்று முந்துங்கள். விளக்கம் : இறைவன் திருவடி இன்பம் நிலையானது ஆதலின், 'ஆழிவின்றி நின்றதோர் ஆனந்தம்' என்றார். 'பாண்டிப் பெரும்பதம்' என்றது, பாண்டி நாட்டை அரசாளும் உரிமையை. அதனை எடுத்துக் கூறியது, சிவபெருமானைப் பாண்டி நாட்டுக்கு இறைவனாகக் கூறிவரும் முறைபற்றி. 'முழுதுலகும்' என்றது எல்லா அண்டங்களையுமாம். இறைவனது வள்ளன்மைக்கு எல்லையின்று என்க. இதனால், இறைவன் முத்தி இன்பத்தையேயன்றி, இம்மை மறுமை இன்பங்களையும் அருளுபவன் என்பது கூறப்பட்டது. 8 விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்கப் பரவிய அன்பரை என்புருக் கும்பரமாம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையுந் தாம்அறி யார்மறந்தே. பதப்பொருள் : விரவிய - கலந்த, தீவினை - கொடிய வினைகளால் விளையும், மேலைப்பிறப்பு - இனிவரும் பிறவியாகிய, முந்நீர் கடக்க - கடலைக் கடப்பதற்காக, பரவிய - வழிபட்ட,
|