பக்கம் எண் :

திருவாசகம்
566


40. குலாப்பத்து
(தில்லையில் அருளியது)

தில்லையினது விளக்கத்தைக் குலாத்தில்லை எனச் சிறப்பித்துக் கூறும் பத்துப்பாடலாதலின், இது குலாப்பத்து எனப்பட்டது.

அனுபவம் இடையீடு படாமை

சிவானந்த அனுபவம் தடைப்படாதிருத்தல்.

கொச்சகக்கலிப்பா

திருச்சிற்றம்பலம்

ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளும் சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

பதப்பொருள் : அடியேன் - அடியேன், ஓடும் கவந்தியுமே - திருவோட்டையும் கோவணத்தையுமே, உறவு என்றிட்டு - பற்றெனத் துணிந்து, உள் கசிந்து - மனம் கனிந்து, தேடும் பொருளும் - தேடுதற்குரிய பொருளும், சிவன் கழலே எனத் தெளிந்து - சிவபெருமானது திருவடியே என்று தேறி, கூடும் - உடம்பும், உயிரும் - உயிரும், குமண்டையிட - நிறைந்து தெவிட்ட, குனித்து - வளைந்து ஆடி, ஆடும் - நடனம் செய்யும், குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை, கொண்டு அன்றே - பற்றிக்கொண்டே அல்லவா?

விளக்கம் : ஓடு என்பது பிச்சை ஏற்கும் பாத்திரம். ஓடுங் கவந்தியுமே உறவென்றது, உலகப் பொருளிலுள்ள பற்றின்மையைக் குறித்தது. மயிர்க்கூச்செறிந்து, உள்ளம் பூரித்தலை, 'கூடும் உயிருங்குமண்டையிட' என்றார், 'ஆடும் குலாத்தில்லை ஆண்டான்' என்றது, தில்லை நடராஜப் பெருமானை. 'கொண்டு' என்பது, 'கொண்டேன்' எனப் பொருள் தந்தது; தன்மை ஒருமை வினைமுற்று. 'அன்றே' என்பதுதேற்றம்.

இதனால், இறைவன் திருவருளைப் பெற்றவர்கட்கு அவனது திருவடியே எல்லாப் பொருள்களுமாகும் என்பது கூறப்பட்டது.

1

துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.