பதப்பொருள் : பேரும் - நாமமும், குணமும் - பண்பும், பிணிப்புறும் - பந்திக்கின்ற, இப்பிறவிதனை - இந்தப் பிறவிக் குழியை, தூரும் பரிசு - தூர்ந்து இல்லையாய்ப் போகும்வண்ணம், துரிசு அறுத்து - குற்றங்களை நீக்கிக்கொண்டு, தொண்டர் எல்லாம் - அடியார் எல்லாம், சேரும் வகையால் - இறைவனைக் கூடும் விதத்தால், சிவன் கருணைத் தேன் பருகி - சிவனது கருணையாகிய தேனை உண்டு, ஆரும் - நிறைவுறுகின்ற, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் மிக்க தில்லை ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? விளக்கம் : நாமரூபம் இல்லாத உயிர் பிறவியினால் நாமரூபம் பெறுகிறதாதலின், 'பிணிப்புறும் இப்பிறவி' என்றார். இறைவனைக் கூடுதலால் அடியார்கள் இப்பிறவி வரும் வழியை அடைத்துக்கொள்வாராதலின், 'தொண்டரெல்லாம் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்து' எனறார். நாமரூபம் கெட்டுப் பேரின்பம் பெற்று இன்புறுவாராதலின், 'சிவன் கருணைத்தேன் பருகி ஆரும்' என்றார். ஆர்தலை அடியாருக்குக் கொள்க. இதனால், இறைவன் திருவடியைப் பற்றுவோர் பாசம் நீங்கி உய்வர் என்பது கூறப்பட்டது. 5 கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும் அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. பதப்பொருள் : உடலம் - இவ்வுடம்பு, கொம்பில் - மரக்கிளையில் உண்டாகின்ற, அரும்பாய் - அரும்பு போல உருவெடுத்தும், குவிமலராய் - முன் குவிந்திருந்து பின் மலர்ந்த மலர் போலப் பிறந்தும், காயாகி - காய் போல வளர்ந்தும் பழுத்து - பழம் போல முதுமை அடைந்தும், வம்பு - வீணே, இங்ஙன் - இவ்வாறு, மாண்டு போகாமே - அழிந்து போகாதவண்ணம், நம்பும் என் சிந்தை - எனக்குத் துணையாக நான் விரும்புகின்ற என் மனமானது, நணுகும் வண்ணம் - இறைவனைச் சேரும்படி, நான் அணுகும் - நான் அடைகின்ற, அம்பொன் - அழகிய பொன்னாலாகிய, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்து ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? விளக்கம் : கொம்பிலே பழம் மலராய்த் தோன்றிக் காயாய்க் கனியாய்ப் பழுத்து விழுவது போல, உடம்பு, உலகிலே பாலனாய்த் தோன்றி வாலிபனாய்க் கிழவனாய் முதிர்ந்து அழிவதைக் 'கொம்பில் அரும்பாய்' முதலியனவற்றாற் குறிப்பிட்டார். உடம்பு உள்ள பொழுதே உடம்பு பெற்ற பயனை அடைந்துவிட வேண்டும் என்பதாம். மனம் அன்றி உற்ற துணை உயிர்க்கு வேறு இல்லையாதலின், 'நம்புமென் சிந்தை' என்றார், இனி, மனத்தை
|