இதனால், இறைவன் திருவருளைப் பொன்னே போலப் போற்றி வாழ வேண்டும் என்பது கூறப்பட்டது. 9 கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக் கிம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும் அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. பதப்பொருள் : கொம்மை வரிமுலை - திரட்சியும் தேமலும் உள்ள தனங்களையுடைய, கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்ற உமையம்மையின், கூறனுக்கு - பங்கை உடையவனுக்கு, செம்மை மனத்தால் - அன்போடு கூடிய மனத்தினால், திருப்பணிகள் செய்வேனுக்கு - திருத்தொண்டுகள் செய்கின்ற எனக்கு, இம்மை தரும் பயன் இத்தனையும் - இப்பிறப்பில் உண்டாகக்கூடிய வினைப்பயன்கள் முழுமையும், ஈங்கு ஒழிக்கும் - இவ்வுலகிலேயே ஒழிக்க வல்ல, அம்மை - தாயாகிய, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் மிக்க தில்லை ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? விளக்கம் : 'இறைவனுக்குத் தொண்டு செய்ய, ஞானத்தோடு கூடிய நன் மனம் வேண்டும்' என்பார், 'செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு' என்றார். 'எடுத்த பிறப்பிலே செய்யும் வினை தொடர்ந்து ஏறுமாயின் மீண்டும் பிறப்பு உண்டு; ஆதலின், எனது தொண்டினை ஏற்று உகந்து இறைவன் இப்பிறப்பில் வினைகள் தொடராதவாறு அறுத்து அருள் செய்கின்றான்' என்று வியக்கின்றார். அம்மை என்றது, தாயைப் போன்று, செய்த தவற்றினை உடனே பொறுத்து அருளுகின்றான் என்றதாம். இதனால், இறைவனது அடியாரை இரு வினைகள் தொடரா என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|