விளக்கம் : ஒடுருபை, 'போகம்' என்பதற்குங்கொள்க. செல்வம் முதலியன, தமது தன்மைகளால் ஆசையை வளர்ப்பனவாதலின், 'குணங்களால் ஏறுண்டு திரிவேனை' என்றார். குலாவுதல் - துன்பம் என்று அறியாது களித்திருத்தல், 'இறைவன் இப்பற்றினின்றும் விடுவிக்க வந்தான்' என்பார், 'வீடு தந்து என்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி' என்றார். 'ஆடுவித்து' என்பதையும், 'அகம் புகுந்து ஆண்டது' என்பதையும் முன் பின்னாக மாற்றிக்கொள்க. இதனால், இறைவன் உலகப்பற்றுகளினின்றும் விடுவிக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 5 வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. பதப்பொருள் : வணங்கும் - யாவரும் கீழ்ப்படுதற்குரிய, இப்பிறப்பு இறப்பு இவை - இத்தன்மையுடைய பிறப்பு இறப்புகளாகிய இவற்றை நீக்கும் வழியினை, நினையாது - எண்ணாது, மங்கையர் தம்மோடும் - பெண்களோடும், பிணைந்து - சேர்ந்து, வாய் இதழ் - வாய் இதழில் ஊறும், பெருவெள்ளத்து - பெரிய நீர்ப்பெருக்கில், நான் அழுந்தி - நான் முழுகித் திளைத்து, பித்தனாய்த் திரிவேனை - மயங்கி அலைகின்ற என்னை, குணங்களும் குறிகளும் இலா - குணங்களும் அடையாளங்களு மில்லாத, குணக்கடல் - அருட்கடலாகிய இறைவன், கோமளத் தொடும் கூடி - அழகுடையவளாகிய உமையம்மையோடும் கூடி, அணைந்து வந்து - அணுகி வந்து, என்னை ஆண்டுகொண்டருளிய - என்னை ஆட்கொண்டருளிய, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன். விளக்கம் : காமுகர் மகளிரது வாயிதழில் ஊறிய நீரைப் பாலோடு தேன் கலந்தது போன்ற சுவையினையுடையதாக மயங்குவாராதலின், 'மங்கையர்தம்மோடும் பிணைந்து, வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்தி' என்றார். 'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்' என்று நாயனார் காமுகரது நிலையை விளக்குதல் காண்க.
|