பக்கம் எண் :

திருவாசகம்
587


விளைகின்ற உண்மை அன்பு என்பது விளங்கும். ஆகவே, பன்மலர் கொய்து சாத்தலும், சீவன்முத்தி நிலையிற் செய்யும் வழிபாடாயிற்று. இவ்வழிபாடே மூவுலகுக்கும் அப்புறத்து வைப்பது என்க, 'திருப்பெருந்துறைப்பெருமான் உடம்பினுள் புகுந்ததோடு வீடுபேறும் அளித்துப் பேரின்பத்தில் ஆழ்த்திவிடுவான்' என்பார். 'முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்புறத்தெமை வைத்திடும்' என்றார். மூவுலக வாழ்க்கையுமே மீண்டும் பிறவியுள் செலுத்துமாதலின், பிறவியின்றி இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை 'மூவுலகுக்கும் அப்புறம், என்றார். திருவள்ளுவர், 'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்றதும் இதனையே என்க. அன்பு செய்தலும் மலர் பறித்திடுதலும் முத்தி பெறுதற்குரிய சாதனங்களாம் என்க.

இதனால், இறைவன் மலவாதனையை நீக்கி வீடுபேறு அளித்தருளுவான் என்பது கூறப்பட்டது.

6

பிறவி யென்னுமிக் கடலைநீந்தத்தன்
பேர ருள்தந் தருளினான்
அறவை என்றடி யார்கள்தங்கள்
அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாந்
திறமை காட்டிய சேவடிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பதப்பொருள் : பிறவியென்னும் - பிறவியாகிய, இக்கடலை நீத்த - இந்தக் கடலை நீந்துவதற்கு, தன் பேர் அருள் - தன்னுடைய பேரருளாகிய தெப்பத்தை, தந்து அருளினான் - கொடுத்தருளினவனும், அறவை என்று - துணையில்லாதவன் என்று எண்ணி, அடியார்கள் தங்கள் - அடியார்களுடைய, அருள் குழாம் - அருட்கூட்டத்தில், புகவிட்டு - புகுவித்து, நல்உறவு செய்து - அவர்களோடு நல்ல உறவை உண்டாக்கி, எனை உய்யக்கொண்ட - என்னைப் பிழைக்கும்படி ஆட்கொண்ட, பிரான் தன் - தலைவனுமாகிய இறைவனது, உண்மைப் பெருக்கம் ஆம் - உண்மையான பேரருளாகிய, திறமை காட்டிய - தனது வல்லமையைக் காட்டிய, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நமது தலை நிலைபெற்று நின்று, திகழும் - விளங்கும்.

விளக்கம் : திருப்பெருந்துறைப்பெருமான் நிலையான இன்பத்தை அருளியதோடு, அவ்வின்பம் நிலைக்கும் வண்ணம் அடியார் கூட்டமாகிய துணையையும் நல்கினான் என்பார், 'அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டு' என்றார். 'அடியார் குழாத்தை, உறவு செய்து' என்றதனால், பிறர் குழாத்தைத்