பக்கம் எண் :

திருவாசகம்
611


என்பார். 'எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்' என்றும், திருவடிப் பேற்றுக்கு முந்தாது போய்விட்டோமோ என்று பின்னால் வருந்தினால் பயனில்லை என்பார், 'பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கரியன் பெம்மான்' என்றும் கூறினார். பேழ்கணித்தல் என்னுஞ்சொல், 'பின்பு பெரிதும் இரங்குதல்' என்னும் பொருளது.

இதனால், இறைவன் திருவடிப் பேற்றுக்கு முந்த வேண்டும் என்பது கூறப்பட்டது.

7

பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமால் உற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமால் அறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.

பதப்பொருள் : பெருமான் - இறைவனது, பேரானந்தத்து - பேரின்பத்தில், பிரியாதிருக்கப்பெற்றீர்காள் - பிரியாமல் மூழ்கியிருக்கப் பெற்றவர்களே, நீர் அருமால் உற்று - நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்தி, பின்னை - பின்பு, அம்மா - ஐயோ என்று, அழுங்கி அரற்றாதே - வருந்தி அலறாவண்ணம், திருமா மணிசேர் - அழகிய சிறந்த மணிகள் இழைக்கப்பெற்ற, திருக்கதவம் - திருக்கதவு, திறந்த போதே - திறந்திருக்கும்போதே, சிவபுரத்து - சிவபுரத்திலுள்ள, திருமால் அறியா - திருமாலறியாத, திருபுயங்கன் - அழகிய பாம்பணிந்த பெருமானது, திருத்தாள் - திருவடியை, சென்று சேர்வோம் - சென்றடைவோம் (ஒருப்படுமின்).

விளக்கம் : திருவருட்பேற்றுக்கு முந்தாது தங்கிவிட்டோமெனில், உலக மயக்கம் சூழ்ந்து வருத்துதலால் வருந்த நேரும்; ஆதலின், திருவருள் வழியே சென்று நிருத்தனைக் கும்பிட வேண்டும் என்பார், 'திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோம்' என்றார். 'புயங்கம்' என்பது 'ஒரு வகைக் கூத்து' என்றும் பொருள் தருமாகலின், 'புயங்கப் பெருமான்' என்பதற்குக் கூத்தப்பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம்.

இதனால், இறைவன் திருவருள் தோய்வினின்றும் பிரியாதிருக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

8