திருப்பெருந்துறையுள், மேய பெருமான் - எழுந்தருளிய பெருமானும் ஆகியவன், பிரியாது - நீங்காது, என் நெஞ்சத்து - எனது உள்ளத்திலே, இன்று - இப்பொழுது, இருந்து உறையும் - தங்கி வாழ்பவன்; அறிவார்க்கு - இதனை அறிபவர்கள் இருந்தால் அவர்களுக்கு - இதனை அறிவீர்களோ' என்று அறைகூவல் விடுகின்றேன். விளக்கம் : 'மிகப் பெரியவர்களாகிய பிரமனும் திருமாலும் காணாது மயங்கும் இறைவன், என் நெஞ்சில் வீற்றிருக்கிறான். ஆனால், இதனைப் பிறர் அறிய முடியாது என்பார், 'அறையோ அறிவார்க்கு' என்றார். 'அறையோ' என்பது 'அறிந்தவர்கள் சொல்லுங்கள்' என்று அறைகூவி அழைப்பதாம். 'சிவன் எனும் ஓசையல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே' என்று திருநாவுக்கரசர் அருளுவதனையும், அதனை, 'அறை கூவும் திருப்பதிகம்' என்று சேக்கிழார் குறிப்பதையும் நினைவுகூர்க. இதனால், இறைவன் அடியார் நெஞ்சத்தில் நீங்காது இருப்பவன் என்பது கூறப்பட்டது. 5 பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்குவந் தென்மனத்தை - அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து. பதப்பொருள் : அத்தன் - எம் தந்தையும், பெருந்துறையான் - திருப்பெருந்துறையுடையவனும், ஆட்கொண்டு - ஆளாகக் கொண்டு, பேர் அருளால் - பெருங்கருணையால், நோக்கும் - பார்க்கும், மருந்து - மருந்தாயிருப்பவனும், இறவா - எல்லையற்ற, பேரின்பம் - பேரானந்தமாயிருப்பவனும் ஆகிய இறைவன், வந்து - எழுந்தருளி வந்து, என்னைப் பித்து ஏற்றும் - என்னைப் பேரன்பு கொள்ளச் செய்வான், பிறப்பு அறுக்கும் - பிறவியைப் போக்குவான்; என் மனத்தை - என்னுடைய உள்ளத்தை, பேச்சு அரிதாம் - சொல்லுவதற்கு அருமையான, மத்தமே ஆக்கும் - களிப்பை உடையதாகச் செய்வான். விளக்கம் : பெருந்துறையான், மருந்து, பேரின்பம் என்பனவும், அத்தன் என்பதனோடு ஒத்த பெயர்கள். இறைவன் தந்தையாய், நன்னெறி காட்டும் ஆசானாய், நோயைத் தீர்க்கும் மருத்துவனாய், இன்பத்தையருளும் ஆனந்தமூர்த்தியாய் உள்ளான் என்றதாம். 'பித்தென்னை ஏற்றும்' என்றது, அன்பையும் அவனேயருளுவான் என்னும் கருத்தது. 'பிறப்பறுக்கும், மத்தமேயாக்கும்' என்றதால், பாச நீக்கத்தையும் இன்பப் பேற்றையும் குறிப்பிட்டார். இறையின்பம் சொல்லவொண்ணாதது ஆதலின், 'பேச்சரிதாம் மத்தம்' என்றார்.
|