50. ஆனந்தமாலை (தில்லையில் அருளியது) சிவானந்தத்தை அடைய விரும்பிப் பாடிய பதிகமாதலின், அது ஆனந்தமாலை எனப் பெயர் பெற்றது. மாலை என்பது, இங்குப் பாமாலையைக் குறித்தது. சிவானுபவ விருப்பம் இது, சிவானந்த மேலீட்டால் உலக போகத்திலுள்ள வெறுப்பை உரைத்தல் என்பது. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் மின்னே ரனைய பூங்கழல்க ளடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாங் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனிஉன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே. பதப்பொருள் : மின் நேர் - மின்னலையொத்த, அனைய -அந்த, பூங்கழல்கள் - நின் திருவடிகளை, அடைந்தார் - அடைந்த அடியார்கள், வியன் உலகம் கடந்தார் - பெரிய உலகமாகிய கடலைக் கடந்தார்கள்; அமரர் எல்லாம் - தேவர் எல்லோரும், பொன் - பொன்மயமான, ஏர் - அழகிய, அனைய - அந்த, மலர் கொண்டு - மலர்களைத் தூவி, போற்றா நின்றார் - துதிக்கின்றார்கள்; கல் நேர் அனைய - கல்லையொத்த அத்தன்மைத்தாகிய, மனக்கடையாய் - மனத்தையுடைய கீழ்மையனாய், கழிப்புண்டு - அடியாரால் ஒதுக்கப்பட்டு, அவலக் கடல் வீழ்ந்த - துன்பக் கடலில் விழுந்த, என் நேர் அனையேன் - என்னை நானே ஒத்த அத்தன்மையேன், இனி - இனிமேல், உன்னைக் கூடும் வண்ணம் - உன்னை வந்தடையும் வண்ணம், இயம்பாய் - சொல்வாயாக. விளக்கம் : பொன் மலராவன, கற்பகம் பாரிசாதம் முதலியன. 'கீழ்மையில் எனக்கு ஒப்பு யானே' என்பார், 'என்னேர் அனையேன்' என்றார். இறைவனது திருவடிகள் மிகவும் மேன்மையானவை, அவற்றை விரைவில் கூட வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்தவாறாம்.
|