பக்கம் எண் :



சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாந் திருமுறை

திருவிசைப்பா
 

‘திரு     இசைப்பா’ என்பது, ‘கடவுட் டன்மை பொருந்திய இசைப்
பாட்டுக்கள்’  எனப்  பொருள்  தரும்.  தேவாரத்  திருப்பதிகங்கட்குப்
பின்னர்   அவைபோல   அருளாசிரியர்  சிலரால்   இசைத்  தமிழாக
அருளிச்செய்யப்பட்ட   திருப்பதிகங்களே   ‘திருவிசைப்பா’     எனப்
பெயர்பெற்றன.   எனினும்.  தேவாரத்தில்  உள்ளதுபோல   இவற்றுள்
தாளத்தோடு  அமைந்த  திருப்பதிகங்கள் மிகுதியாக இல்லாமல்,  பண்
மட்டில்    அமைந்த    திருப்பதிகங்களே    மிகுதியாக    உள்ளன.
திருவிசைப்பாக்களில்  முன்னிற்பவை, திருமாளிகைத் தேவர் அருளிச்
செய்த திருவிசைப்பாக்கள்.

1. திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா

1. கோயில் -‘ஒளிவளர் விளக்கே’

பண்-பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

1.

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!
   உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
   சித்தத்துள் தித்திக்குந் தேனே!
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
   அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
   தொண்டனேன் விளம்புமா விளம்பே.             (1)