பக்கம் எண் :



2. கோயில் - ‘உயர்கொடி யாடை’

பாதாதி கேசம்

பண்-பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

திருவுரு
 

12.

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
   ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
   பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
   நிறைந்தசிற் றம்பலக் கூத்தா!
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
   வடிகள்என் மனத்துவைத் தருளே.               (1)
 

இத்திருப்பதிகம்,    தில்லைக்  கூத்தப்பெருமானது திருவுருவத்தைப்
பாதாதி  கேசமாக (அடிமுதல் முடிவரையிலுமாக)  நினையும்   வகையில்
அருளிச்செய்யப்பட்டது.  ‘திருவாலியமுதனார்’  என்னும்   மற்றொருவர்
அருளிச்செய்த ஒரு திருப்பதிகமும் இவ்வாறிருத்தல் அறியத் தக்கது.

12  ‘நெடுமாடத்து’ என்பதனை முதலிற் கூட்டுக. மிடை- நெருங்கிய.
படலம்-கூட்டம்.  தூமம்-புகை. பியர். ‘பியல்’ என்பதன் போலி.  ‘பிடர்’
என்பது  பொருள்.  இதனைக்  கொடிப்படலத்திற்கும் கூட்டுக,  ‘‘பியர்’’
என்பதை,    ‘பெயர்’    எனவும்    பாடம்   ஓதுவர்.    ஓங்கியுள்ள
மேல்மாடங்களில்     உயர்த்தப்பட்டுள்ள    கொடிச்      சீலைகளின்
கூட்டத்தின்மேல்       ஓமத்தின்       புகையும்,       அவ்வோமப்
புகைப்படலத்தின்மேல்   அகிற்புகைப்  படலமும்    நிறைந்திருக்கின்ற
பெரும்பற்றப்புலியூர்’  என்றவாறு.  சியர்  ஒளி-விளக்கத்தை    யுடைய
ஒளி.  மயர்-மயக்கம்.  ‘மயர்வு’  என்பதும்   பாடம்.    சேவடிகளையே
கூறினாராயினும், திருவுருவம் முழுவதையும் கூறுதல் கருத்தென்க.