இத்திருப்பதிகம், தில்லைக் கூத்தப்பெருமானைக் காதலித்துத் தன்வயம் இழந்தாள் ஒருத்தியது நிலையைக் கண்டு அவள் தன் செவிலித்தாய் கூறும் முறையில் அமைந்தது.‘‘வனபவள வாய் திறந்து’’ (திருமுறை-4,6.) என்பது போலும் திருப்பதிகங்களைக் காண்க. இதன், ஒவ்வொரு திருப்பாட்டிலும், மகேந்திர மலையும், பல திருப்பாட்டுக்களில் சிவபிரான் அருச்சுனனுக்காக வேட வடிவம் கொண்டு சென்ற வரலாறும் குறிக்கப்படுகின்றன. இதன் திருப்பாட்டுக்கள் ஆறு, ஏழு, எட்டு என்னும் அளவில் எனைத்துச் சீரானும் சீர்வரையன்றி மயங்கிவரும் அடிகளால் மயங்கிசையே பெற்று வருகின்றன. 23. உறவு-அடையப்படும் பொருள். ‘‘யோகம்’’ என்றது, முத்தியைக் குறித்தது. உயிர் ஆளி-உயிர்களை ஆள்பவனே. என்னும்- என்று பிதற்றுவாள். ‘‘பொன்’’ என்றது, காதற்சொல். ‘ஒருநாள் சென்று’ என இயையும். சிறவாதவர்-இழிந்தோர்; சிவநெறியைக் கடைப்பிடியாது கைவிட்டவர். ‘தேவராலும் அழிக்க இயலாத வலிய திரிபுரத்தை அழிக்க வில்லேந்திய பெருமான், சிறிய பன்றிப்பின் வில்லேந்திச் சென்றான்’ என, அவனது எளிவந்த தன்மையை விதந்து உருகியவாறு. சிவபிரான் அருச்சுனன் பொருட்டு வேடனாய்ப் பன்றிப்பின் சென்ற வரலாறு வெளிப்படை. மகேந்திர மாமலை, திருவாசகத்துட் கூறப்பட்டது. ‘பேரரசாகிய மலை’ எனக் காரணப் பெயராக்கி, ‘கயிலாய மலை ’ என இங்கு உரைத்தலும் ஆம். ‘‘மகேந்திரம்’’ என்றதை, ‘மயேந்திரம்’ |