இத்திருப்பதிகம் பல்பொருளும் பற்றி வருவது. 46. எதிர் இல் போகம்-இணையில்லாத இன்பம் ; சிவபோகம்; அதனைத் தரும் நாயகன் (தலைவன்) என்க. புயல் வண்ணன்-மேகம்போலும் நிறம் உடையவன் ; திருமால். ‘‘சிவிகை’’ என்றதை, ‘ஊர்தி’ என்னும் அளவாகக்கொள்க. ‘‘ஊர்ந்த மேகம்’’ என்றது, ‘உண்ட சோறு’ என்பதுபோல நின்றது. ‘ஒரு கற்பத்தில் திருமால் சிவபெருமானை மேகவடிவங் கொண்டு தாங்கினமையால், அக்கற்பம், ‘மேகவாகன கற்பம்’ எனப் பெயர் பெற்றது’ என்னும் புராண வரலாற்றை அறிந்துகொள்க. மிகு-உயர்ந்த, திருவீழிமிழிலைக் கோயிலின் விமானம் திருமாலால் விண்ணுலகினின்றும் கொணரப்பட்டமை பற்றி ‘விண்ணிழி விமானம்’ எனப்படும் என்பது இத்தல வரலாறு. இது தேவாரத் திருப்பதிகங்களிலும் குறிக்கப்படுதல் காணலாம். ‘யோகம்’ என்பது, முத்தியைக் குறித்தது. ‘மற்றொன்றும் உணர்கிலேன்’ என இயையும். ‘‘உண்டென உணர்கிலேன் என்றது, ‘பொருளாக நினைந்திலேன்’ என்றதாம். |