விராய் எண்ணியவழி மிகுதி பற்றி. ‘இவர்’ என உயர்திணை முடிபு பெற்றது. அன்றி, அனைத்துப் பெயர்களையும் உயர்திணை என்றே கொள்ளினும் அமையும். மிகை-செருக்கு. இந்திரனைத் தோள் நெரித்ததும், கருடனை இடப தேவரால் அலைப்பித்ததும், பிறவும் ஆகிய வரலாறுகளைப் புராணங்களிற் கண்டுகொள்க. இதன் ஈற்றடியில் உள்ள தொடர் ஆறாம் திருப்பாட்டின் ஈற்றடியிலும் வந்திருத்தல் காண்க. 56. உளம் கொள - உயிர்களின் உள்ளம் நிறையும்படி. மதுரம்-இனிமை; இங்குத் தண்மைமேல் நின்றது. ‘தண்கதிர்’ என்றதனால், திங்களாய் நிற்றல் பெறப்பட்டது. ‘‘கதிர்’’ என்றது. பின்வரும் அருளையேயாம். ஆம்தனை - இயலும் அளவு. சேந்தன்-முருகன்; இவ்வாசிரியர் பெயரும் அதுவாதல் கருதத் தக்கது. களம் கொள-என்முன் வந்து தோன்றுமாறு. பிழைக்குமோ - தவறுமோ; வாராதொழிவானோ! கைக்கொண்ட - பற்றிநின்ற. கனக கற்பகம்-பொன்வண்ணமான கற்பகத்தருப்போல்பவன். ‘‘சேந்தன் தாதையை’’ என்றதை ‘‘விடைமேல் வருவானை’’ என்பதன் பின்னும், ‘‘யான்’’ என்றதை, ‘‘என்று’’ என்பதன்பின்னும் கூட்டுக. |