இத்திருப்பதிகம், ‘ உறவாகியயோகம்’ என்னும் பதிகம் போலச் செவிலி கூற்றாய் அமைந்தது; அந்தாதியாக வருவது. இதன் திருப்பாட்டுக்களில் ஒவ்வோரடியிலும் வரும் ஆறு சீர்கள் ஒருபெற்றியவாய் வாராது, மயங்கி வருகின்றன. 58. காவிரியாற்றில் பல புண்ணியத் துறைகள் உள்ளன; அவற்றுள் ஒருதுறையே ஆவடுதுறை. இஃது உமையம்மை பசுவாய் இருக்கவேண்டி வந்த நிலையை நீக்கினமை பற்றி வந்த காரணப் பெயர் என்பது புராணக் கொள்கை. இத்துறையைச் சார்ந்துள்ள ஊர், ‘சாந்தை’ என்பது. எனவே, ‘ஆவடுதுறை’ என்பது, இறைவன் திருக்கோயில் உள்ள இடமும், ‘சாந்தை’ என்பது, அதனைச் சார்ந்துள்ள ஊர்ப் பகுதியுமாதல் பெறப்படும். ‘துறை’ எனப் பெயர் பெற்ற இடங்களில் அப்பெயர்கள் பெரும்பாலும் ‘அருட்டுறை’ என்பது போலத் திருக்கோயிலுக்கே உரிய பெயராய்ப் பின், அஃது உள்ள ஊர்க்கும் ஆயினமை பெறப்படும். ‘தில்லையில் உள்ள அந்தணர் மூவாயிரர்’ என்பது போல, ‘திருவாவடுதுறையில் உள்ள அந்தணர் ஆயிரவர்’ என்பது மரபாதல் இத்திருப்பாடலால் பெறப்படுகின்றது. ஒன்று - ஒருசொல். மாதிமை - பெருமை. “மாதிமையே” என்ற ஏகாரவினா, எதிர்மறை குறித்து வந்தது. |