இத்திருப்பதிகம், சிவகுமாரனாம் முருகக் கடவுள்மேல் வந்தது. பதினொன்றாந் திருமுறையில் இவ்வாறு சிவகுமாரர் மேலும், சிவனடியார்மேலும் வரும் பகுதிகள் உளவாதலை அறிந்துகொள்க. இதன் ஆசிரியர் முருகன் பெயர் உடையராதல் இங்குக் கருதத்தக்கது. இதுவும், முன்னைத் திருப்பதிகம் போலச் செவிலிகூற்றாயும், அந்தாதியாயும் வருதல் காண்க. ‘இத் திருப்பதிகம் செவிலி கூற்றாக அருளப்பட்டது’ என்பதனை ஆசிரியரே இதன் இறுதிப்பாடலில் அருளுதல் காண்க. 69. மால் உலாம் மனம் - மயக்கம் நிகழ்கின்ற மனம். ‘‘தந்து’’ என்றது, ‘என் மனத்தை அத்தன்மையதாக்கி ’ என்றவாறு. சங்கம் - சங்க வளையல், தேவர் அனைவரையும் சேனைகளாக்கித் தான் அவற்றுக்குப் பதியாய் நிற்றலின், ‘தேவர் குலமுழுது ஆளும் குமரவேள்’ என்றாள். குரா, ஒரு மரம். ‘‘ என் சேந்தன்’’ என்றாள், காதல் பற்றி. 70. வார் - கச்சினையுடைய. பீர் - பசலை. ‘‘இவளை எழில் கவர்ந்தான்’’ என்றது, ‘பசுவைப் பால்கறந்தான்’ என்பது போல நின்றது. கவளம், யானை உண்ணும் உணவு. எழிலைக் |