இத்திருப்பதிகம், ‘சிவபெருமானுக்குச் சிறந்த கோயிலாய் விளங்குவது தில்லைத் திருச்சிற்றம்பலமே’ என அதன் பெருமையைக் கூறுகின்றது. 80. கணம்-கூட்டம். ‘கூட்டமாக’ என ஆக்கம் வருவிக்க. ‘குடுமியில் உள்ள செம்மணிகளையுடைய’ என்க. பல தலைகளையுடைமை பற்றி, ‘‘கணம் விரி குடுமி’’ என்றார். கவை நா-பிளவு பட்ட நாக்கு. கறை-நஞ்சு. தாடியைக் குறிப்பதாகிய, ‘அணல்’ என்பது இங்கு, ஆகுபெயராய், வாயைக் குறித்தது. ’அனல்’ எனவும் பாடம் ஓதுவர். கண் செவி-கண்ணொடு பொருந்தி நிற்கும் காது. பகு வாய்-பிளந்த வாய். பணம் விரி துத்திப் பொறி-படத்தின்கண் பரந்த, ‘துத்தி’ என்னும் பெயரை உடைய புள்ளிகள். மொழுப்பு-உச்சி. மழை-மேகம். ‘துணர்’ என்பது, ‘‘திணர்’ எனத் திரிந்து நின்றது. அரும்பு-தோன்றுகின்ற, ‘தவழ் பெரும்பற்றப்புலியூர், அரும்பு பெரும்பற்றப்புலியூர்’ எனத் தனித்தனி முடிக்க. ‘புலியூர்த் திருச்சிற்றம்பலம்’ என இயையும். திருவளர்-அழகுமிகுகின்ற. |