பொருள் உவமையாற் குறிக்கப்பட்டது. ‘179-ம் பாடலைக் காண்க. ‘போல’ என, தொகுக்கப்பட்ட அகரத்தை விரித்து, ‘போல ஆகும்படி’ என உரைக்க. ‘போல மகிழ்ந்த’ என இயையும். நிறைந்த-நிரம்பிய. வேதகம்-இரச குளிகை. இது செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கும். பல வகை மருந்துகளால் செவ்வனே ஆக்கப்பட்ட குளிகையே பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றுமன்றி, அவ்வாறு ஆக்கப்படாது குறையுடைய குளிகை மாற்றாமையின், ‘‘நிறைந்த வேதகம்’’ என்றார். வேதகத்து-வேதகம்போல (மகிழ்ந்த என்க). மனத்தைத் திருத்தியதற்கு வினைமுதலாயினமை தோன்ற. இறைவனை முன்பு அழலோடு ஒப்பித்தவர், பின்பு வியப்புத் தோன்ற, வேதகத்தொடு ஒப்பித்தார். நெகுதல், இறைவனிடத்து அன்பு காரணமாகவும், உயிர்களிடத்து அருள்காரணமாகவுமாம். ‘‘மகிழ்ந்த’’ என்றது, ‘எழுந்தருளி மகிழ்ந்த’ என முன்னிகழ்ச்சியையும் குறித்துநின்றது. வினை படும் உடல்-வினை உண்டாதற்கு ஏதுவாய உடம்பு. ‘‘உடல்’’ என்றது, அதனகத்துள்ள மனத்தை, ‘‘எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய் யான் இதற்கிலனொர்கைம் மாறே’’ (திருவாசகம்-397) ‘‘நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே யான் உன்னை விடுவே னல்லேன்’’ (திருமுறை-6.95.4.) என்றாற்போல வந்தன காண்க. விழுமிய-சிறந்த விமானம்-திருக்கோயிற் கருவறை மாளிகை. 118. விரியும் நீர்-கடல். ‘அதன்கண் பிறந்த ஆலம்’ என்க. ஆலக் கருமை -விடத்தால் உண்டாகிய கருநிறம். சாந்து-சந்தனமாகப் பூசிய திருநீறு ‘‘வெண்மையும்’’ எனவேறு எண்ணினாராயினும், உவமைக்கு ஏற்ப, ‘வெண்மையொடு கூடிய செந்நிறத்தொளியும்’ என ஒன்றாக உரைத்தல் கருத்து என்க. ‘‘ஒளிரும்’’ என்ற பெயரெச்சம், ‘‘கழுத்து’’ என்னும் இடப்பெயர் கொண்டது. ‘‘கழுத்தில் ஓர் தனிவடம் கட்டி’’ |