இத் திருப்பதிகம் திரைலோக்கிய சுந்தரத்துப் பெருமானைக் காதலித்த தலைவியது கூற்றாயும், அவள் செவிலித்தாயது கூற்றாயும் அமைந்தது. 122. முதலடியை ஈற்றிலும், ஈற்றடியை முதலிலும் கொண்டு உரைக்க. ‘ஆர ஓங்கி’ என்பது தொகுத்தல் பெற்று ‘ஆரோங்கி’என நின்றது. ஆர-நிரம்ப. ஓங்கி-மகிழ்ச்சி மிகுந்து. ‘முகம் மலர்ந்து விழுந்தொழிந்தேன்’ என இயையும். ‘என் திறம் மறந்து’ என வேறு எடுத்துக்கொண்டு உரைக்க. திறம்-பெண் தன்மை ; அவை நாண் முதலியன ; இஃது உண்மைப் பொருளில் உலகியலை உணர்த்தும் பழி-அலர், ‘‘விழுந்தொழிந்தேன்’’ என்பது ஒரு சொல் தன்மைத்து, சீர்-அழகு. ‘கோடை’ என்பது ஊரின் பெயரும், திரைலோக்கிய சுந்தரம்’ என்பது திருக்கோயிலின் பெயருமாம். ‘அருவினையேன் என் திறம் மறந்து, ஊர் ஓங்கும் பழியையும் பாராது, ஓங்கி, முகம் மலர்ந்து உன்பாலே விழுந்தொழிந்தேன்; அவ்வாறாகியும், உனது தலையளியை நான் பெறாதிருத்தல், நீர் ஓங்கி வளர் கமலம் நீரைப் பொருந்தாத தன்மையன்றோ’ என்க. நீர் ஒங்கி வளர் கமலம்-நீரால் ஓங்கி வளர்தற்குரிய தாமரை. நீர் பொருந்தாத் தன்மை - அந்நீரைப் பெறாத தன்மை. அஃதாவது, வாடி உலர்ந்து அழிந்துபோதல். முதல் அடிக்கு, ‘நீரில் உள்ள தாமரையில் நீர் ஒட்டாதிருக்கின்ற தன்மை’ என உரைப்பாரும் உளர். இத் திருப்பாட்டு, தலைவி கூற்று. |