திருச்சிற்றம்பலம்
அகரமும் ஆகிய இருசாரியைகள் வந்தன. வேறாக - பேரன்பர் அல்லாத பிறராக. இவர் சிறிதன்பு உடையவர். வீறாடி - அவர் அனைவரினும் பெருமை பெற்றவளாய். உன்னைப் பொது நீப்பான்- உன்னைத் தன் ஒருத்திக்கே உரியனாகச் செய்து கொள்ளுதற்கு, விரைந்து- விரைதலைக் கொண்டு. இன்னும் தேறாள் - இன்னும் அம்மயக்கம் தெளியப்பெற்றிலள். ‘இறைவனை ஒருத்தி தனக்கே உரியனாகச் செய்துகொள்ளுதல் இயலாத தொன்றாதலின், அவ்வெண்ணத்தை மயக்கம்’ என்றாள். ‘காதல் மிகுதியால் இன்னதோர் எண்ணம் இவட்குத் தோன்றிற்று’ என்பதாம். 131. ‘துகிலையும் இடையையும், குழலையும் உடைய தெரிவை’ என்க. இவ்வாறு ஓதினாரேனும் ‘தெரிவை துகில்தளர்ந்து, இடை தளர்ந்து, குழல் அவிழ்ந்து இருந்த பரிசு கண்டு இரங்காய்’ என்றலே கருத்தாதல் உணர்க. முரிந்த நடை - அசைந்த நடை. வழங்கு ஒலி - மத்தளம் முதலிய வாச்சியங்கள் தருகின்ற ஓசை. திருந்து விழவு - திருத்தமாய் உள்ள விழாக்கள். அணி - அழகு செய்கின்ற. 132. தேனைப் பருகி, மாலை சூடிவரும் செல்வரது இயல்பு பற்றித் தமது திருவருட் செல்வப் பேற்றை இவ்வாறு விளக்கினார். ‘யான் இவ்வாறிருக்கின்ற காரணத்தால் எனது இத்தமிழ்மாலையும் நிலைபெற்ற தமிழ்மாலையாயிற்று’ என்பதாம். |