இத்திருப்பதிகம் இறைவர், தமக்கு எளிவந்து அருள் செய்த கருணையைப் புகழ்தலை முதன்மையாகக் கொண்டு, பிறவற்றையும் கூறுவதாய் அமைந்தது. 133. தேட-தேடுமாறு, அங்ஙனே-அவ்விடத்தே ; என்றது, ‘மாலும் அயனும் பொருதவிடத்தே’ என்றதாம். ‘‘பெரிய’’ என்றது, ‘பெரியோனாய் நின்ற’ என ஆக்கவினைக் குறிப்புப் பெயர். ஆள் விரும்பி-ஆளாக விரும்பி. ‘‘மறக்கேன்’’ என்றதில் எதிர்காலங் காட்டும் ககர வொற்று வந்ததன்று ; குகரச் சாரியை வந்தது. எனவே, ‘மறவேன்’ என்பது பொருளாயிற்று. இவ்வாறு வருதல் பிற்கால வழக்கு. இருவன் இரு பொருளாய் இருப்பவன். இரு பொருள்-சத்தி, சிவம் ; பெண்மை, ஆண்மை, கன்னல்-கரும்பு. 134. நெக்கு-குழைந்து. ‘ஒருநாளும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழிமொழி மாலை-வணக்கம் கூறுகின்ற தமிழ்ப் பாடற்கோவை. ‘மாலை பண்ணிநின்று’ என இயையும். மழலையஞ் சிலம்பு-இனிய ஓசையை உண்டாக்குகின்ற சிலம்பு. |