இதுவும் முன்னைத் திருப்பதிகத்தோடு ஒத்தது. 162. ‘எழு பரிதி’ என இயையும். பரிதி - சூரியன், ‘நூறாயிர கோடி பரிதிகளின் ஒளியினை உடைய பரிதிஒன்று உளதாயின், அதனது அளவாய ஒளியினை உடைய திருவுடம்பு’ என்க. ‘‘திருவுடம்பு’’ என்றதன்பின்னர், ‘உண்டு’ என்பது எஞ்சிநின்றது. ‘‘அழகிது’’ என்றதற்கு, ‘அஃது’ என்னும் எழுவாய் வருவிக்க. ஓகாரம், சிறப்பு. அரணம் - கோட்டை. ‘பல மாடம்’ என்க. குலாம் படை செய்-அழகு பொருந்திய பொருட் கூட்டத்தால் செய்யப்பட்ட. ‘‘பருவரை’’ என்பதில் ‘போல’ என்பது விரித்து, ‘பெரிய மலையிடத்துத் தவழ்தல் போல’ என உரைக்க. ‘வெண்டிங்களாகிய இலை’ என்க. இலை-தகடு. வெள்ளித் தகட்டைக் குறித்தவாறு. பதணம்மதிலுள் மேடை. இஞ்சி-மதில். ‘அரணத்தை, இஞ்சிசூழ் தஞ்சை’ என்க. ‘இவர்க்கு அலகெலாம் பொதிந்த திருவுடம்பு உண்டு’ என முன்னே சென்று முடியும். தஞ்சை, ‘தஞ்சாவூர்’ என்பதன் மரூஉ. 163. ‘அகலாது’ என்பது, ஈறு குறைந்தது. ‘நெஞ்சில் புகுந்தன’ என இயையும். பொன்-அழகு. திரு-மேன்மை. |