நிற்றல் முதலிய மூன்றும் செயலற்றிருக்கும் நிலையாதலின், அக்காலங்களில் நினைதலும், எழுதல் கிளர்ந்தெழுந்து செயற்படும் நிலையாகலின், அக்காலத்தில் தொழுதலும் கூடுவவாயின. ‘இரு நிலையிலும் உன்னை மறவாதிருக்கின்ற யான், ஒரோவொருகால் எக்காரணத்தாலேனும் மறந்திருப்பினும் இருக்கவொட்டாய்’ என்க. இதன்பின், ‘ஆயினும்’ என்பது வருவிக்க. ஒன்றி-உன்னைப் பொருந்தி; என்றது, பிறவற்றை மறந்து’ என்றவாறு. இது, ‘நினையாது’ என்பதில், ‘நினைதல்’ வினையோடு முடிந்தது. ‘‘வரவு’’ என்றதில், ஓடு உருபுவிரித்து, ‘வரவொடு நில்லாயாய்; ஆப்போல் கதறுவித்தி’ என மாற்றி உரைக்க. கன்று பிரி-கன்றினால் பிரியப்பட்ட, ‘‘கற்றா’’ என்றது, வாளாபெயராய் நின்றது. 210. படுமதம்-மிக்க மதம். இடவயிறு-இடம் பெரிதாயவயிறு. இவற்றை யுடையகளிறு, மூத்த பிள்ளையார். ‘அயிராவணம்’ என்பாரும் உளர். ‘‘பிரான்’’ என்றது, ‘பிரானாகிய நீ’ என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழுவமைதி. அடி அறிய- உனது திருவருளை உணர்தற்பொருட்டு. ‘அடி அறிய ஓத்து உணர்த்துவது அகத்தியனுக்கு அன்றே எனவும், ‘இது நடுவோ’ எனவும் மாற்றுக. ஓத்து-ஆகமப் பொருள். சிவபெருமான் அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தார் என்பதும் வரலாறு. ‘அகத்தியனுக்கு அந்நிலையை அருளி, அடியேனுக்கு உலகியலை அருளினாய்; இது, இரண்டெருதுகளை உடைய ஒருவன், ஒன்றற்குப் புல் இட்டு, மற்றொன்றற்கு வைக்கோல் இடுதல் போல்வது’ என்பதாம். 211. ஒடுக்கள், எண்ணிடைச் சொல். ‘மண்ணின்கண் அளவும் (பொருந்திய) மனிதர்க்கும், விண்ணின்கண் அளவும் வானவர்க்கும்’ என நிரல்நிரை வந்தது. கண்-களைகண்’ |