இதுவும், ‘உயர்கொடி ஆடை’ த் திருப்பதிகம் (2) போல இறைவனது திருவுருவைப் பாதாதி கேசமாகப் புகழ்வது என்பது இதன் பெயராலே விளங்கும். இதன் திருப்பாடல்கள் இரண்டாவதும் நான்காவது மாய அடிகள் சீர் குறைந்து இடையே கூன் பெற்று வருவன. 215. மையல் மாது-காதலை உடைய பெண்டு; உமை - ‘காதலுக்கு இடமாய பெண்டு’ என்றும் ஆம். கார் புரையும் - மேகம் போலும். கறை - கறுப்பு. இதனுள், ‘‘கறை, சிந்தை’’ என்பவை கூன். 216. சலம் - நீரின்கண். பொன் - அழகு. தாழ்ந்து எழுந்து -ஆழ வேரூன்றி வளர்ந்த. தடம் - குளத்தின்கண். ‘தடமும்’ என்பது பாடம் அன்று, தடம் புனல்வாய் -மிக்க நீரின்கண் உள்ள. ‘அத் தடம்புனல்வாய்’ எனச் சுட்டு வருவிக்க. |