இத்திருப்பதிகம், தில்லைக் கூத்தப் பெருமான் அங்கு அம்பலத்தின்கண் ஆடும் சிறப்பைப் புகழ்ந்து பாடுவது. 236. முதலடியில் உள்ள, ‘ஆய்’ என்பன பலவும் வினையெச்சங்கள். ‘இரவு முதலிய பல பொருள்களாகி’ என்பது அவற்றின் பொருள். இவ்வெச்சங்கள் பலவும் அடுக்கிநின்று, ‘‘நிழலாய்’’ என்ற விளியேற்ற குறிப்புவினைப் பெயரைக் கொண்டு முடிந்தன. அல்-இரவு. ‘‘அரு, உரு’’ என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. ‘‘அமுதம்’’ என்றதும், தேவர் அமுதத்தையே குறித்தது. கல்லால் நிழலாய்-கல்லால மரநிழலில் எழுந்தருளி யிருப்பவனே. ‘‘கயிலை மலையாய்’’ என்றதும் விளிப்பெயரே. காண-(உனது நடனத்தை) யாங்கள் காணுமாறு. ‘‘பதஞ்சலிகள்’’ என்றது. ‘பதஞ்சலி முனிவர்போன்ற முனிவர்கள்’ என்றவாறு. பரவ-துதிக்க. பதஞ்சலியார் முதலிய முனிவர் பலரது துதிகளுக்கு இரங்கியே இறைவன் தில்லையில் வெளிப்பட்டு நின்று தனது நடனத்தைக் காட்டியருளினான்’ என்பது தில்லைக் கூத்தப் பெருமானைப் பற்றிய வரலாறு. செல் வாய்-மேகங்கள் பொருந்திய. சாரியையின்றி’ மதிற்றில்லை’ என ஓதப்படுவது பாடம் அன்று. |