இத்திருப்பதிகமும் செவிலிகூற்று ஒன்றொழித்து முன்னைத் திருப்பதிகமே போல்வது. 268, ‘தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்று அவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து எனக்கு இறந்துபாடு உறுவிக்கின்றாரோ ! இது வியப்பாகின்றது’ என்பது, முதல் இரண்டடிகளின் பொருள். ஓகாரம், இழிவு சிறப்பு. ‘தேன் வண்டு’ என இயையும். நமர்- நம் உறவினர். என்னாது - என்று சொல்லாதபடி; என்றது, ‘என் துன்பத்தைத் தவிர்க்காது நின்று’ என்றதாம். ‘‘நாடகம்’’ என்றது சிலேடை; இறைவனது அருட்கூத்தோடு, போலி வேடங்கொண்டு நடித்தலையும் குறித்தலின். தனக்கு அருளாமை பற்றி, அனைத்துயிர்க்கும் அருள்புரியும் கூத்தினை, ‘நாடகம்’ என்றாள் என்க. 269. காரரவு கரும் பாம்பு. ஐம்மதி-அழகிய சந்திரன். ‘‘கண்டேன்’’ என்றதைப் பெயராக்கி, ‘அதனை, ‘‘தோற்றாலும்’’ என்பதனோடு முடிக்க. ஆடிவருதல், வீதியின்கண் என்க. ‘நான் வளைகளைத் தோற்கும் அளவிற்குக் காதல் கரைகடந்து நிற்கவும், இவர் என்னை அருகணையவும் ஓட்டாது’ ஓட்டுகின்றார்; இவர் தம்மைக் காதலித்தார்க்கு அருளுந்திறம் இதுதான் போலும்’ என்றபடி. |