274. ஆவா, இரக்கக் குறிப்பு. ‘‘இவர்’’ என்றது எழுவாய். அந்தகன்-கூற்றுவன். மூவா உடல்-அழியாத உடல் ; அமர தேகம். அவிய-அழியும்படி. உகந்த-தம் அடியவனை விரும்பிக் காத்த ’’ முக்கண்ணர்’’ என்றது. ‘இறைவர்’ என்றபடி. இதன்பின், ‘அவ்வாறாக’ என்பது வருவிக்க. தே ஆம்-தெய்வத் தன்மை பொருந்திய. ‘சிற்றம்பலவராகிய இவர்’ என முன்னே கூட்டுக. செய்யுளாதலின் சுட்டுப்பெயர் முன் வந்தது. ‘‘கோவாய்’’ என்றதன்பின் ‘வந்து’ என ஒருசொல் வருவிக்க. ‘கோவா வளை’ என்பது பாடம் அன்று. ‘‘கொள்வாரோ’ என்ற ஓகாரம் சிறப்பு. ‘இது தக்கதன்று’ என்பது குறிப்பெச்சம். ‘என்னை வளைகள் கொள்வார்’ என முன்னே கூட்டுக. ‘வளைகள் கொள்ளுதல்’ என்பது ‘மெலிவித்தல்’ எனப் பொருள்தந்து, ‘‘என்னை’’ என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. 275. வலிவார்-வலிசெய்வார்; நலிகின்றவர். ‘‘வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான்’’ (பெ.பு.திருநீலகண்ட-32.) என்றது காண்க. மணவாளர்-அழகர். ‘‘மணவாளர்’’ என்றாள், உமையது அச்சத்தைத் தவிர்த்தமை கருதி. அதனால், இவளது காதல் மீக்கூர்தல் பெறப்படும். ‘மணவாளர் இச்சிற்றம்பலவர்’’ எனச் சுட்டும். ‘ஆயினும்’ என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. தான், அசைநிலை. கண்டறிவார்-சிலரால் கண்டறியப்பட்டவர்; என்றது, ‘சிலர் தலைப்பட்டுணர்ந்து, ‘‘அற்றவர்க்கு அற்ற சிவன்’’ (திருமுறை-3.120.2.) என்றாற்போலக் கூறப்பட்டவர்’ என்றபடி. அவ்வியல்பு தன்னளவில் இவர்மாட்டுக் காணப்படாமையின், ‘‘முன்னம்’’ கண்டறிவார் ஒவ்வார்’’ என்றாள். ‘‘அறிவார்’’ என்றது காலமயக்கு. |